2. அணைத்துக்கொண்ட கங்கை
1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப் போராட்டத்துக்கென இந்தியாவிலுள்ள மக்களுடைய ஆதரவைத் திரட்ட விரும்பினார். அதற்காக, இந்தியாவுக்கு வந்தார், இங்கு கல்கத்தா (இன்றைய கொல்கத்தா), பம்பாய் (மும்பை), பூனா, சென்னையில் சில தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
மக்களைச் சந்திக்க வந்தவர் ஏன் தலைவர்களைச் சந்திக்கவேண்டும்?
அன்றைய சூழ்நிலையில் காந்திக்குத் தென்னாப்பிரிக்காவிலிருந்த இந்தியர்கள் அறிமுகமாகியிருந்த அளவுக்கு இந்தியாவிலிருந்த இந்தியர்கள் அறிமுகமாகியிருக்கவில்லை. அதனால், இங்குள்ள மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்ற தலைவர்களின்மூலம் அவர்களை நெருங்க முயன்றார். அதாவது, அவராக மேடையேறி ‘நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகிறேன். அங்குள்ள இந்தியர்கள் இப்படியெல்லாம் சிரமப்படுகிறார்கள். உங்களுடைய ஆதரவு இருந்தால் அவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என்று சொல்வதைவிட, ‘இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகிறார். இவருடைய போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவளிக்கவேண்டும்’ என்று நான்கைந்து பெரிய தலைவர்கள் பரிந்துரைத்தால் மக்களுக்குக் காந்திமீது கூடுதல் நம்பிக்கை பிறக்குமில்லையா?
அத்துடன், இந்தியாவில் எந்தெந்த வழிகளில் மக்களை நெருங்கலாம் என்று காந்திக்குச் சரியாகப் புரியவில்லை. அதற்கும் இந்தத் தலைவர்களுடைய அறிவுரை அவருக்குத் தேவைப்பட்டது.
அப்படிக் காந்தி சந்தித்த பல இந்தியத் தலைவர்களில் ஒருவர், பால கங்காதர திலகர்.
Add Comment