இனவெறிப் படுகொலையைச் செய்தவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாதெனும் வாதம் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கிறது. இரண்டு கறுப்பினப் பெண்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கொலை செய்தவர்களைப் பிணையில் வெளியில் அனுப்பக்கூடாது எனப் போராட்டங்களும் நடக்கின்றன.
மரியா மக்காடோ(45), லூசியா என்ட்லோவ்(34) என்ற இரு கறுப்பினப் பெண்கள் பசிக்கு உணவு தேடி பண்ணை ஒன்றுக்குச் சென்றுள்ளனர். பண்ணையில் பன்றிக்கு வைத்திருக்கும் பழைய காலாவதியான உணவை எடுத்துச் சென்று பசியாறுவது இங்கு சகஜம். தன்னைக் கேட்காமல் தன் பண்ணையில் திருட முனைபவர்களை விரட்டி விட்டிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. இரண்டு பெண்களையும் இரண்டு தொழிலாளர்கள் உதவியுடன் சுட்டுக் கொன்றுவிட்டார் பண்ணை முதலாளி.
இந்தப் பெண்களுடன் ஆண் ஒருவரும் போயிருக்கிறார். அவரும் சுடப்பட்டார். ஆனால் காயங்களுடன் தப்பிவிட்டார். மருத்துவ உதவிக்குப் பின்னர் தனது மனைவியைத் தேடி வந்தவர் அழுகிய நிலையில் பன்றி உணவாக மனைவியைக் கண்டு காவல்துறைக்குத் தெரியப்படுத்தினார். கொன்றதோடு நிறுத்தாமல் உடலை வெட்டித் துண்டுகளாக்கிப் பன்றிக்கு உணவாகப் போட்டுள்ளார் பண்ணை முதலாளி. தங்கள் பசியைத் தீர்க்க வழி தேடிப்போய் பன்றியின் பசிக்கு உணவாகியுள்ளனர் இப்பெண்கள். உயிர் தப்பிய கணவனால் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Add Comment