26. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு
அவனிடம் ஆரம்பித்து அறிவிடம் வந்து நின்றிருக்கிறோம். நல்லது. அற்புதங்களின் இயல்பு இதுதான். எதிர்பாராத தருணங்களில் தண்ணொளியாகத் தோன்றித் துலங்கும்.
ஒரு வசதிக்கு இதனை அணுவை நிகர்த்ததென்று வைத்துக்கொள்வோம். தேவைப்பட்டால் பிறகு உடைத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு தெளிந்த மெய்யறிவு=அணு.
அறிவில் இருந்து மெய்யறிவை நோக்கிய பயணத்துக்குப் பல்வேறு பாதைகள் இருக்கின்றன. நமது புலன்களின் மூலம் கிடைக்கிற அனுபவங்கள் அதிலொரு பாதை. அதாவது, அனுபவங்களின் வழி பெறப்படுகிற அறிவு. அதிலிருந்து சலித்தெடுத்து அடைகிற மெய்யறிவு.
இந்த சலித்தெடுக்கும் பணி என்பது பகுத்தறிவின் மூலம் பெறப்படுகிறது. வகுத்து வைத்த அனைத்தையும் பகுத்து எடுத்து ஆராய்வது. இது நெருப்பு. இது சுடும், தொடாதே என்றால் தொடாமல் இருப்பது வகுத்து வைத்த அறிவு. சுடு உணர்ச்சியைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து, ஆமாம்; நெருப்பைத் தொட்டால் சுடும் என்று நாமே தெளிவது பகுத்தறிவு.
Add Comment