ஒரு பெண்ணின் மூளையில் இந்தக் கணம் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று பகுதியளவேனும் அறிவது சாத்தியமற்றது. அதனால் குறைந்தபட்சம் பெண் ஈயின் மூளையையாவது புரிந்து கொள்ளலாமென்று புறப்பட்டார்களா தெரியாது. பயணம் வெற்றி பெற்று விட்டது.
அறிவியல் வரலாற்றில் முதன் முறையாக, ஒரு முழு அங்கியின் மூளை, மொத்தமாக வரைபடமாக்கப்பட்டுள்ளது. சுமார் 140, 000 நரம்புகளும், அவற்றின் 50 மில்லியன் தொடர்புகளும் அப்படியே பதியப்பட்டிருக்கின்றன. ஒரு சர்க்கரைப் பளிங்களவேயான அந்த இத்துனூண்டு பழ ஈ மூளையின் எல்லாவற்றையும் பிழிந்தெடுப்பதற்கு பல வருடங்களும், நூற்றுக்கு மேற்பட்ட விஞ்ஞானிகளும் தேவைப்பட்டனர். எப்படியோ, இனி எல்லாம் சுபமே. இதிலென்ன சுபம் இருக்கிறது என்று புரியாமல் முழிப்பவர்களுக்கே இந்தக் கட்டுரை.
மூளையை விடுங்கள். எளிதான வேறோர் எடுத்துக்காட்டு இதோ. ஒரு சிறு ஆணியை எடுத்து அதனைச் சுற்றி நீண்ட செப்புக் கம்பியைத் திரும்பத் திரும்பச் சுற்றி, அதற்கு மின் இணைப்பைக் கொடுத்தால் , ஆணி காந்தமாகிவிடும். இது மிக இலகுவான ஒரு மின்காந்தப் பரிசோதனை. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின், மகா பெரிய வேலைத்திட்டங்களில் இந்த எண்ணக்கரு பயன்பட்டது. நாடு விட்டு நாடு போகும் மின்சார ரயில், இந்தக் காந்தத் தொழில்நுட்பத்தை வைத்தே இயங்குகிறது. அதாவது கையளவான ஒரு சிறு கண்டுபிடிப்பு, கண்டங்கள் கடந்து போய் உலக வரலாற்றையே மாற்றி விடக் கூடியது என்பது தெளிவாகிறதா.
கடைசி வரி த்ராட்டில்ல!
விஸ்வநாதன்