9. மனிதர், நாயகர், தேசப்பற்றாளர்
1902ம் ஆண்டு, ஒரு சிறு இடைவெளிக்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பினார் காந்தி. அங்கு அவருக்கு ஏகப்பட்ட பணிகள் காத்திருந்தன.
காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் இது. தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எதிர்த்து அவர் போராடவேண்டியிருந்தது, அதற்கெனப் பெரும் எண்ணிக்கையிலானவர்களை ஒன்றுதிரட்டவேண்டியிருந்தது. சத்தியாக்கிரகம் என்னும் போராட்ட முறையை அவர் உருவாக்கியதும் செழுமைப்படுத்தியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.
இதே நேரத்தில்தான் காந்தியின்மீது இந்தியாவின், உலகத்தின் பார்வையும் அழுத்தமாக விழுந்தது. அதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர், அவருடைய அரசியல் குருவான கோகலே.
செல்லும் இடங்களிலெல்லாம் கோகலே காந்தியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய முதன்மை நோக்கம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய போராட்டத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுவதும் அதற்கு ஆதரவு திரட்டுவதும்தான். ஆனால், அந்தப் போராட்டம் தகுதிமிக்க ஒருவரால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் உரக்கச் சொன்னால்தானே மக்களுக்கு நம்பிக்கை வரும்? அதனால்தான் கோகலே காந்தியின் பெயரைத் திரும்பத் திரும்ப அழுத்தமாக முன்வைத்தார்.
Add Comment