10. சொல்மாறாட்டம்
நான் செய்வது தருமமில்லை என்பது நன்றாகத் தெரியும். இப்பாவச் செயலுக்காக நான் ஏந்திச் சுமக்கவேண்டிய கொடுந்துயரம் எதுவென்றும் அறிவேன். ஆயினும் இதனை நான் செய்ய வேண்டியிருக்கிறது.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. மறையும் இறையும் மாளாதிருக்கும்வரை என் தரப்பின் நியாயம் ஒரு ஜீவ தாரிணியாக உடனோடிக் கொண்டிருக்கவேண்டும். எந்தப் பனுவல் என்று முளதாகவிருக்கிறதோ அதன் சொற்களுக்கிடையே நான் என் சரிதத்தினைக் கலப்படம் செய்கிறேன்.
இது நிரந்தரமாகுவதாகுக. இச்சொற்கள் யுகங்கடந்து நிலைபெறட்டும். அக்னி அதனுள் ஒளிர்வானாக. என்னால் விதைக்கப்படும் இச்சொற்கள் என்றும் இதனை விலகாதிருக்கட்டும். கருவைச் சுமக்கும் பெண்ணை அவளது தாயும் புருஷனும் எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்வரோ, அப்படி இதனை வையம் ஏந்தி வாழச் செய்வதாகுக. வாக் என்னைக் காக்கட்டும். வாக் இதனைக் காக்கட்டும். வாக் அச் சாரனைக் காக்கட்டும்.
சுயநலம்தான். ஆனால் இச்சுயத்தினுள் ஒரு பெருங்குடிக் குலத்தின் ஆன்மா நீந்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கிராத குலத்துச் சாரனின் நினைவுப் பாண்டத்தில் என்னைப் பற்றி உயர்வாகவும் மரியாதையாகவுமே அவன் சிந்தித்தும் சேமித்தும் வைத்திருக்கிறான். திகைப்பில் திளைத்தவண்ணம் முதல் முதலில் என்னைச் சந்தித்த கணம் தொடங்கி, அவனை அதர்வனின் பர்ணசாலைக்கு எழுநூறு காலடித் தொலைவில் நான் கொண்டு விட்டு வந்தது வரை எதையும் அவன் மறக்கவுமில்லை, மாற்றிச் சேமிக்கவும் இல்லை. இருப்பினும் அந்தப் பகுதிகளை அவன் நினைவிலிருந்து நீக்கிவிட்டு ரித விரோதமாக என் சொற்களை அவன் சிந்தனைக்குள் மாற்றி வைக்கிறேன். அவன் எந்நாளும் இந்த ஸ்தேயச் செயலை அறியப் போவதில்லை. மாபாவிகள் மட்டுமே செய்யத் துணியும் அபகரணம்தான். மந்திரமறிந்தவன் அதனைச் செய்வதை தெய்வங்கள் மன்னிக்கப்போவதில்லை என்பதை அறிவேன்.
ஆனால், இப்பிரபஞ்சம் ஒன்றை உணர வேண்டும். இருபத்து மூன்று பரிவத்சர காலத் தவ வாழ்வில் நான் சம்பாதித்த சக்தி அனைத்தையும் இந்த ஒரு செயலுக்குள் செலுத்தியிருக்கிறேன். புண்ணியமென்று எனது இப்பிறப்பில் என்ன இருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் அதனை மீதமின்றி இந்தச் சாரனுக்குச் சேர்ப்பித்துவிட வேண்டி யாகம் வளர்த்து வருணனுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறேன்.
Add Comment