படிப்பிலும், பணியிலும் முதலிடம் பிடித்த அன்னா செபாஸ்டியன், இறப்பிலும் முந்திக் கொண்டுள்ளார். இருபத்தாறு வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் அளவுக்கு அவரது பணிச் சூழல் இருந்துள்ளது.
வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன அன்னாவிடம் விடிய, விடிய வேலை வாங்கிய அலுவலக ஊழியர்கள் யாரும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. குற்ற உணர்வாக இருக்கலாம். அவர்களுக்கும் விடுப்புக் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது அவர்களும் அன்னாவை போன்றே மன அழுத்தத்தில் இருப்பவர்களாக, இதைச் சந்திக்கும் தைரியம் இல்லாதவர்களாக இருக்கலாம். தமிழ்நாட்டு மென்பொருள் துறை ஊழியர் கார்த்திகேயன், உத்திரப்பிதேச பஜாஜ் பினான்ஸ் நிறுவன ஊழியர் தருண் சக்சேனா போன்று அடுத்தடுத்து நிகழும் மரணங்கள், இந்தியாவில் இன்றைய கார்பரேட் நிறுவனப் பணியாளர்களின் நிலையை உணர்த்துகின்றன.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் பட்டியலில், பணிச்சுமை அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. இந்திய ஊழியர்களில் பாதிப் பேர் வாரத்திற்கு சராசரி 49 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பூட்டான், பங்களாதேஷ் என்று பெரும்பாலான தெற்காசிய நாடுகளும் நம்முடன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. சீனா கூட நமக்கு பிறகுதான் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இது 36 மணி நேரம் தான்.
Add Comment