எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில் நடந்த ராஜ்யசபா மந்திரி பிரதிநிதித்துவம்.
அதாவது 1936ம் ஆண்டு முதல் ராஜபக்சேக்கள் எந்தவொரு தேர்தலையும் விட்டுவைக்கவில்லை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா ராஜபகேக்கள் வரிசையில் தொடர்ந்த சம்பிரதாயம், மகிந்த ராஜபக்சேவின் மகன், குஞ்சுப் பேரன் நாமல் ராஜபக்சே இம்முறை தேர்தலில் போட்டியிட மறுத்ததும் நின்று போய்விட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அநுரகுமார திஸாநாயக்க அபூர்வமான ஆருடம் ஒன்றைக் கூறினார். ‘நீங்கள், இத்தேர்தலில் எனக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சாதாரணமானதல்ல, இதனால் நான் ஜனாதிபதியாகுவதைவிட இந்நாட்டைப் பாழ்படுத்திய பெரும் தொகையான அரசியல்வாதிகள் நிரந்தரமாய் வீட்டுக்குச் செல்ல இருக்கிறார்கள். இலங்கையை இதுவரை ஆண்ட குடும்பங்களின் அரசியல் அஸ்தமிக்கப் போகிறது. வேண்டும் என்றால் பாருங்கள்’
Add Comment