பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் பல வாரங்களாக நடத்தும் போராட்டத்தில் காவலர்கள் தலையிட்டுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பதினேழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொழிற்சாலையில் ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதன இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக இது செயல்பட்டு வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஈட்டும் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் தொழிற்சாலையின் வழியாகக் கிடைக்கிறது.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன?
தொழிலாளர்களுக்கு இடைக்காலச் சிறப்பு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சில வழித்தடங்களில் மட்டுமே இருக்கும் குளிரூட்டப்பட்ட பேருந்து வசதியை அனைத்து வழித்தடங்களிலும் அமைக்க வேண்டும். தொழிலாளர்கள் பணியின் போது இறந்தால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். நிறுவனத்தில் செயல்படும் உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவும் உணவுப்படியை உயர்த்தி வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும். சுகாதாரமான கழிப்பறைகளை அமைத்துத் தர வேண்டும். திருமணத்தின்போதும் குழந்தை பிறப்பின்போதும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகள் தவிர அவர்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைக்கத் தேவையான அனுமதியைக் கொடுக்க வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது.
Add Comment