தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில் இவர்களைப் பணியமர்த்தப் போகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் போக்கு எல்லா மாநிலங்களிலும் உள்ளது. தெலுங்கானாவில் இது கொஞ்சம் அதிகம். தெருவெங்கும் திருநங்கைகள் என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட ஆரம்பித்தன. வண்டியை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கினால், சகவாகனங்களை சமாளிப்பதைவிட, இவர்களை சமாளிப்பதே பெரும்பிரச்சினையாக உள்ளது என வாகனஓட்டிகள் சலித்துக்கொண்டனர். போக்குவரத்தினை சரிசெய்வதா? இவர்களை விரட்டிவிடுவதா? எதைச்செய்வது என போக்குவரத்துக் காவல்துறையினர் திணற ஆரம்பித்தனர். சிக்னல்களில் சிகப்புவிளக்கு ஔிர்ந்தால்போதும். கூட்டமாக வந்து நின்றுகொண்டு கைகளைத்தட்டியபடி வாகன ஓட்டிகளிடம் காசு கேட்கும் திருநங்கைகளின் கூட்டம் பொதுமக்களுக்கும், தெலுங்கானா அரசுக்கும் ஒரு மாபெரும் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பணம் கேட்பது மட்டுமின்றி மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்தன. இப்போது இந்தப் பிரச்சினையில் நல்லதொரு முடிவு பிறந்துள்ளது.
பால்புதுமையினர் சிக்கலைத் தீர்க்க, தெலுங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி ஒரு புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளார். போக்குவரத்துத் துறையில், சாலைப் போக்குவரத்தினை சீர்செய்ய காவல்துறையினருக்கு ஊர்காவல் படையினர் ஏற்கனவே உதவிவருகின்றனர். அவர்களோடு திருநங்கைகளையும் தன்னார்வலர்களாக இணைத்துச் செயல்பட வைப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட உள்ள திட்டமாகும். இந்தத் திட்டத்தினைப் பற்றி திருநங்கைகளிடம் விளக்கி அதில் அவர்களுக்கு ஆர்வமுள்ளவர்களாக்கும்படி காவல்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத்திட்டத்தின்படி திருநங்கைகளை தேர்வுசெய்து அவர்களுக்குப் போக்குவரத்து விதிகள், கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள், போக்குவரத்து ஒழுங்குமுறைகள் ஆகியவைகள் பற்றியெல்லாம் போதியப் பயிற்சிகள் வழங்கப்படும். பின்பு அவர்களுக்கு போக்குவரத்து தன்னார்வலர்கள் என்கிற அடையாளம்கொடுக்கப்படும். அவர்கள் ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட அனுமதிக்கப்படுவர். இதுகுறித்த ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான விதிமுறைகள் புதிதாக வகுக்கப்படுகின்றன என அரசுத்தரப்பு அறிக்கை தகவல்தெரிவிக்கின்றது. இந்த தன்னார்வலர்களுக்கென்று பிரத்யேக சீருடைகள் வழங்கப்படுமா? இல்லை வழக்கமான சீருடைகளில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்களா என்பதெல்லாம் இனிதான் முடிவு செய்யப்படும். இந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கென்று மாத சம்பளம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment