14. குறி
இன்றைக்கு உனக்கு அம்பெய்யக் கற்றுத்தருகிறேன்; புறப்படு என்று என் தகப்பன் சொன்னான். உடனே அம்மா ஓடிச் சென்று, என்றோ பத்திரப்படுத்தி வைத்திருந்த காட்டெருமையின் கீழ்வரிசைப் பல் ஒன்றை எடுத்துச் சிறிய துணியில் முடிந்து என் வலது தோளில் தாயத்தாகக் கட்டிவிட்டாள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்தது. நான் வளர்ந்துவிட்டேன் என்பதல்ல. அதை என் தகப்பன் அங்கீகரிக்கும் விதமாக ஒரு கலையைப் பயிற்றுவிக்க முடிவு செய்து அழைத்ததை மிகவும் முக்கியமானதாக நினைத்தேன்.
நாங்கள் வசித்த சிறிய வனத்துக்கு மேற்கே கால் காத தொலைவில் அமைந்திருந்த வேறோர் அடர்ந்த கானகத்துக்குச் சென்றோம். தகப்பன் அதனைச் சிரட்டி வனம் என்று சொன்னான். வயோதிகம் வந்துவிட்டது; இனி நெடுங்காலம் வாழமாட்டோம் என்று தெரிந்துகொண்ட மிருகங்கள் எப்படியோ மோப்பம் கண்டு அங்கே வந்துவிடும். அந்தக் கானகத்தின் இரண்டு இடங்களில் மட்டும் விளையும் முஞ்சா வகைப் புல்லின் ஒரு குறிப்பிட்ட ரகத்துக்கு இரண்டு குணங்கள் உண்டு. அது இனிக்கும். ஆனால் விஷத்தன்மை உண்டு. மென்று உண்டால் மெல்ல மெல்ல ஆயுள் குறைந்துகொண்டே வந்து, மண்டல காலத்துக்குள் உயிர் பிரியும். ருருக்களும் கவயங்களும் வாரணங்களும் அதை அறியும். தம் கூட்டத்தைப் பிரிந்து அவை தனித்து வந்து அதனைத் தேடி அடைந்து மெல்லத் தொடங்கிப் பிராணனை விடும் என்று என் தகப்பன் சொன்னான்.
‘மகனே, சுமுரிகளும் துனியர்களும் பிஷ்ருக்களும் யுத்தங்களில் பிடிபடும் ஆரிய வீரர்களைச் சிறையில் அடைத்து, தாகத்துக்கு நீர் கேட்கும்போதெல்லாம் அந்த யவசத்தின் சாறைப் பருகத் தருவார்கள். இதிலிருந்து நீ பெறும் பாடம் என்ன?’
நான் சிறிது யோசித்துவிட்டு, ‘தாவரங்களின் தன்மையைப் பயில வேண்டும் அப்பா’ என்று சொன்னேன்.
Add Comment