15. கசப்பில்லை, பகையில்லை
கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் அதில் வெளிப்படையாகத் தெரிந்தது.
‘என் வாழ்க்கையில் நான் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், காந்தி அளவுக்கு என்னை ஆன்மிக நிலையில் பாதித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று, மாபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி. இன்னொன்று, என் குருவான ரானடே’ என்று அந்த உரையில் காந்தியைத் தாராளமாகப் புகழ்ந்தார் கோகலே, ‘இந்த மூவருக்குமுன்னாலும் நாம் எந்தத் தவற்றையும் செய்யத் தயங்குவோம். செய்வது என்ன? இவர்களுக்கு எதிரில் இருக்கும்போது தவறான எண்ணங்கள்கூட நம் மனத்தில் தோன்றாது!’
‘கடந்த இருபது ஆண்டுகளாகத் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கான போராட்டத்தைக் காந்தி கட்டமைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் சிறிதும் தன்னலமற்றவர், நேர்மையானவர். இந்தப் பணிக்காக இந்தியா அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்கென அவர் தன்னை முற்றிலுமாகத் தியாகம் செய்துகொண்டுள்ளார்.’
‘காந்தி வழக்கறிஞராக நன்கு தொழில் செய்துகொண்டிருந்தவர். ஆண்டுக்கு ஐயாயிரம், ஆறாயிரம் பவுண்டு சம்பாதித்துக்கொண்டிருந்தவர். தென்னாப்பிரிக்காவில் அது மிக நல்ல சம்பளம். ஆனால் இப்போது, அவர் அதையெல்லாம் விட்டுவிட்டு மாதம் மூன்று பவுண்டு செலவில் ஏழைகளிலும் ஏழையைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.’
Add Comment