18. ரிதம்
தமாலபத்ரத்தினும் வீரியம் கொண்ட மூலிகையொன்று எனது பர்ணசாலையின் தெற்கே உள்ள சிறு வனத்திலேயே இருக்கிறது என்று சம்யு சொன்னான். மயோபுவின் ஆசிரமத்தில் இயற்றப்பட்ட யாகத்துக்குச் சென்றிருந்தபோது பேச்சுவாக்கில் அவன் இதனைக் குறிப்பிட்டதும் ‘நீ எப்போது அங்கே வந்தாய்?’ என்று கேட்டேன். அவனுக்கு ம்ருகாரன் அந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறான். தமாலபத்ரத்தினும் அளவில் சிறியது. பத்ரமெங்கும் முள் உண்டு. கசக்கி முகர்ந்தாலும் நெடி இராது. காம்பின் நுனி கறுத்திருக்கும் என்பதே அடையாளம்.
இன்றைக்கு அதைத் தேடிப் பிடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு வனத்துக்குப் புறப்பட்டேன். பொதுவாக மூலிகை கொய்துவரச் செல்லும்போது மாணாக்கர்களை அழைத்துச் செல்வது என் வழக்கம். ஒவ்வொரு மூலிகையின் குணத்தையும் விளக்கிச் சொல்லிக் கொய்யச் செய்யும்போது சாரம் புத்தியில் நிற்கும். ஆனால் நானறியாத ஒரு பத்ரத்தைத் தேடும்போது இன்னொருவர் அருகே இருப்பது சிக்கல். வினாக்கள் செயலைச் சிதைக்கும். சேர்த்து வைத்துக்கொள்; பிறகு கேட்டுத் தெளிவடையலாம் என்றாலும் கேட்க மாட்டார்கள். ஒன்றன்மேல் ஒன்றாக ஐயங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
பத்ரங்கள் அவசியம். தேடிக் கண்டடைவது அவசியம். மாணக்கர்களின் ஐயங்களை விடவுமா என்றால் இல்லை. அது எனது ரிதம். ஒளி ஏந்திச் செரித்துப் பிரகாசிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கச் சித்தம் கொண்டிருந்தேன். சின்னஞ்சிறு நாடிகள் திரமானால் அது மேலும் கீழும் நடுவிலுமுள்ள பெரிய நாடிகளைத் திரமாக்கும். இந்த என் நம்பிக்கைக்கு முரணாக நான் என்றும் நடந்துகொண்டதில்லை.
அன்று நான் வனத்துக்குக் கிளம்புவதாகச் சொன்னபோது மாணாக்கர்கள் அனைவரும் எனக்கு முன்பே பர்ணசாலையின் வாசலில் வந்து சூழ்ந்துவிட்டார்கள். கணப் பொழுது யோசித்தேன். பிறகு, ‘இன்று உங்களுக்கொரு பரீட்சை உள்ளது’ என்று சொன்னேன்.
Add Comment