19. வஜ்ரத்வனி
மழைக்காலம் தொடங்கவிருந்தது. குருகுலத்தில் மேகாம்பர பூஜை செய்து, மூன்று நாள்கள் இடைவிடாமல் வர்ஷ யக்ஞம் நடத்தி முடித்தோம். யக்ஞம் நிறைவடைந்த ஒரு நாழிகைப் பொழுதுக்குள் முதல் தூறல் விழத் தொடங்கிவிட்டது. மாணாக்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து சரஸ்வதியின் கரைக்கு ஓடிச் சென்று ஆனந்தக் கூத்தாடினார்கள்.
மற்ற நதிகளுக்கும் சரஸ்வதிக்கும் ஒரு நுணுக்கமான வேறுபாடு உண்டு. மழை அதிகரித்து, வெள்ளம் பெருகினால்தான் மற்றவை கரைமீறி வரும். சரஸ்வதி அப்படியல்ல. தூறல் விழத் தொடங்கும்போதே அவள் சிலிர்த்துக்கொள்வாள். பூரிப்பில் மெல்ல மெல்லப் பூசினாற்போல உருவெடுப்பாள். இதை என் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுப்பதற்காகவே மழைத் தூறல் தொடங்கும் நாள்களில் இரவு இரண்டு சாமம் கழிந்த பின்னர் அவர்களை வரச் சொல்லி, அவர்களோடு உரையாடியபடியே நதிக்கரைக்குச் செல்வேன். நீர்த்தடத்தினின்று ஆறு காலடித் தொலைவில் நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். கிளம்பும்போது நீர்ப்பரப்பின் எல்லையிலிருந்து ஓர் அரத்னி தள்ளி ஏதாவதொரு அடையாளத்தை நட்டுவைத்துவிட்டு வரச் சொல்வேன்.
மறுநாள் விடிந்ததும் அதே இடத்துக்கு மீண்டும் அவர்களோடு சென்றால் அவள் மிகச் சரியாக அந்த ஓர் அரத்னியளவுக்கு நகர்ந்து முன்னால் வந்திருப்பாள். மாணாக்கர்கள் நடுங்கிப் போய்விடுவார்கள்.
‘குருவே மழை தொடங்கிய முதல் நாளே இப்படியென்றால் இனி வரும் நாள்களில் என்ன ஆகும்?’
Add Comment