நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை வடிவமைத்து, வழிநடத்தியவர். ஒரு வருடமாக இவரைத் தேடி காஸா முழுவதையும் அழித்தொழித்து, கடைசியில் பழிக்குப் பழி வாங்கிவிட்டது இஸ்ரேல்.
இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல. காஸாவின் தெற்கில் எகிப்திற்குச் செல்லும் எல்லையான ரஃபா பகுதி தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நடந்த வழக்கமான ரோந்துப் பணிகளில், சந்தேகப்படும்படி பாதுகாக்கப்பட்ட ஒரு மனிதரைப் பின்தொடர்கிறது இஸ்ரேலின் ராணுவம். அவர் ஒளிந்து கொண்ட கட்டடத்தைப் பீரங்கியால் தாக்கிவிட்டு, இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று பார்க்க ட்ரோனை அனுப்புகிறது. உடலில் காயங்களுடன் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்த சோஃபா மீது அமர்ந்திருக்கிறார் ஒருவர். ட்ரோன் தன்னை நெருங்குவதைக் கண்டதும் அங்கிருந்த தடியை ட்ரோனை நோக்கி வீசுகிறார். இவரைக் கொல்வதற்கு மீண்டும் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட, இறந்த பிறகு தான் இவரது முகத்தைப் பார்க்கிறார்கள். ஹமாஸின் தலைவராக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் வர, அவரது கைரேகையையும், பற்களையும் வைத்து டிஎன்ஏ பரிசோதிக்கப்படுகிறது. இதன் பிறகே, கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வர் என்று ஆதாரத்தோடு அறிவித்தது இஸ்ரேல்.
ஆகஸ்ட் மாதம் தான் சின்வர் ஹமாஸின் தலைவரானார். இஸ்ரேலுடன் போர் தொடங்கியதிலிருந்தே தலைமறைவாக இருந்து ஹமாஸை காஸாவிலிருந்து வழிநடத்தி வந்தார். இஸ்ரேலின் பிணைக் கைதிகளோடு சுரங்கப் பாதைகளில் வசித்து வந்த ஆதாரங்கள் கிடைத்தும், இவரை நெருங்க முடிந்ததில்லை.
Add Comment