போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர் வடகொரியா ஓனர் கிம் ஜாங் உன். போர் என்று எதையும் தொடங்கும் திட்டம் இல்லையெனினும், எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்கிற காட்சியை உருவாக்கி வைத்திருப்பது அவருக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று. இந்த வாரம் மட்டும் அன்னாரின் பெயரில் வந்திருப்பது இரண்டு பெரிய பிராதுகள்.
1. தென்கொரியா எல்லைப் பகுதிகளை ஒட்டிக் குண்டுவெடிப்புகளை நடத்தியது.
2. நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாகக் களம் காணத் தன் நாட்டு ராணுவ வீரர்களை அங்கு அனுப்பிவைத்தது.
வட கொரிய எல்லையின் தென்பக்கதில் உள்ள கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான காங்வான் மாகாணத்தின் அறுபது மீட்டர் நீளம் கொண்ட ரோடு மற்றும் தண்டவாளங்கள். டோங்கேன் – ரீ பகுதியில் ஓர் அறுபது மீட்டர் நீளச் சாலை மற்றும் ரயில் பாதைகள். இரண்டும் இலக்கு. இனி அவர்களுக்கும் நமக்கும் பொதுவெனச் சொல்லிக்கொள்ள எதுவுமே இருக்கக் கூடாது, தகர்த்து எறியுங்கள் என்பது தான் உத்தரவு. லாரி லாரியாக அங்கு அணிவகுப்பதை தொலைநோக்கி வழியாகப் பார்த்துவிட்டு இரு தினங்களுக்கு முன்பே, அவர்கள் ஏதோ செய்கிறார்கள் எனச் செய்திகளைப் போடத் தொடங்கிவிட்டனர் தென் கொரியா தரப்பினர்.
Add Comment