20. இங்கிலாந்து வழியாக இந்தியா
1914ம் ஆண்டு, கோகலே இங்கிலாந்துக்கு வந்திருந்தார்.
அப்போது அவருடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறிதும் ஓய்வெடுக்கவில்லை. தன்னுடைய சொந்த வசதிகளைக் கருத்தில் கொண்டு பொதுப்பணிகளை ஒத்திவைப்பது அவருடைய இயல்பிலேயே இல்லை.
இந்தக் காலகட்டத்தில் இரண்டு சிக்கல்கள் கோகலேவின் உடலையும் மனத்தையும் மிகவும் வாட்டிக்கொண்டிருந்தன. முதலாவது, நமக்கு நன்றாகத் தெரிந்த தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம். காந்தியின்மீது மிகுந்த அன்பு வைத்திருந்த அவர், தென்னாப்பிரிக்க மக்களுக்காகக் காந்தி தன்னை வருத்திக்கொள்வதை நினைத்து மிகவும் துன்பப்பட்டார், இந்த வலையிலிருந்து காந்தி விரைவில் விடுபடவேண்டும் என்கிற அக்கறையுடன் அவருக்குத் தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்தார். அரசியல், ஆட்சி வட்டங்களில் குரல் கொடுத்தல், பெரும்புள்ளிகளின் ஒத்துழைப்பைப் பெறுதல், நிதி திரட்டல், மக்களிடையில் விழிப்புணர்வை உண்டாக்குதல் என்று எல்லாவிதங்களிலும் கோகலேவின் ஆதரவு காந்திக்கும் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கும் பெரிய அளவில் கை கொடுத்தது.
ஆனால், இதற்கான உழைப்பு கோகலேவின் உடல்நலத்தை நாளுக்கு நாள் மோசமாக்கிக்கொண்டிருந்தது. அப்போது காந்தி கோகலேவுக்கு அருகில் இல்லாவிட்டாலும், அவருடைய கடிதங்கள், தந்திகளின்மூலமாகவும் பொது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதன் அடிப்படையிலும் இதைத் தெளிவாக உணர்ந்தார், மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளானார், ‘தயவுசெய்து நீங்கள் எங்களைப்பற்றிக் கவலைப்படாமல் உங்கள் உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார், ‘நீங்கள் இன்னும் நெடுநாள் வாழவேண்டும், உங்களிடம் நாங்கள் பாடம் கற்கவேண்டும். அதனால், தயவுசெய்து ஓய்வெடுங்கள், வேலையைச் சற்று ஒத்திப்போடுங்கள்’ என்று கெஞ்சினார். பலன்தான் இல்லை.
Add Comment