விமலாதித்த மாமல்லன்
I
‘என்ன சார்’ என்னை உங்க குரூப்ல போட்டிருக்காங்க போலயிருக்கு.’
‘வெல்கம் டு தி குரூப். நமக்குப் போட்டிருக்கிற டூர் ப்ரொக்ராம பாத்தீங்களா மிஸ்டர் நரஹரி.’
‘பாத்தேன். பொதுவா யூனிட்டைப் பத்தில்லாம் யார்கிட்டையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கறதில்லே. நடக்கறதுதான் நடக்கும். போய்ப் பாத்துக்கலாம்னு விட்டுடுடறது’ என்றான் பெரும்போக்காக.
‘யூ ஆர் கரெக்ட் மிஸ்டர் நரஹரி. பட் இந்தப் பேர் கேள்விப்பட்டா மாதிரி இருக்கா’ என்று டூர் ப்ரொக்ராம் பேப்பர்களை அவனுக்காய் நகர்த்தி ஒன்றின் மீது விரலை ஓட்டினார்.
‘சார். நா எதையுமே பெருசா ப்ளான் பண்றதில்லே. எதிர்பாத்துக்கிட்டுப் போற எதுவுமே எனக்கு செட்டாகாது. தன்னால வரதை எடுத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கறதுதான் எனக்கு சரிவருது’ என்றவன், ‘ஆனா, இந்தப் பேரு கேள்விப்பட்டா மாதிரிதான் இருக்கு’
‘போனதடவை நாங்க போய்ட்டு வந்த யூனிட்தான் இது.’
‘அதையே திரும்ப உங்களுக்கே எப்படிப் போட்டாங்க. கேட்டா மாத்திக் குடுப்பாங்களே’
‘போன தடவை போன யூனிட்டை திரும்ப எனக்கே போட்டிருக்கீங்களேன்னு, ப்ரொக்ராமைப் பாத்த உடனே போய்க் கேட்டேன்.’
‘இப்ப நீங்க அதே குரூப் இல்லையே. இந்த தடவை மிஸ்டர் நரஹரியோட இல்ல போறீங்க. எல்லாம் அவர் பாத்துப்பாருனு சிரிச்சுக்கிட்டே சொல்லி அனுப்பிட்டாரு மிஸ்டர் கோபாலகிருஷ்ணன்’ என்றார், எல்லோர் பேருக்கும் முன்னால் மிஸ்டர் போட்டுப் பேசும் ஜீவானந்தம் சூப்பிரெண்டண்டண்ட்.
‘ஏன். இவன் போன தடவை சரியா பண்ணலையா.’
‘பண்ணலை…யாவா. நானும் நரசய்யாவும்தான் போயிருந்தோம். போன அப்புறம்தான் தெரிஞ்சிது இது ‘அந்த’ யூனிட்னு. நம்பள ஒண்ணும் பண்ணாம விட்டா போதும்னு காபி டீ கூட கேக்காம பிஸ்லரியைக் கூட நாங்களே காசு குடுத்து வாங்கிக் குடிச்சிட்டு ஓடியே வந்துட்டோம்.’
‘தமிழ் இங்கிலீஷ் மாட்டின கரூர் யூனிட் இதானா.’
‘யெஸ் யெஸ். மிஸ்டர் நரஹரி. பட் யுவர் ஹூமர் சென்ஸ் ஈஸ் டூ மச்’ என்று சொல்லிச் சிரித்தார்.
Add Comment