25. இப்போது எதற்குப் பாராட்டுகிறீர்கள்?
காந்தி வருகிறார் என்றதும் அவரைப் பார்ப்பதற்காகக் கோகலே தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மும்பைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். அதனால், இந்தியா வந்திறங்கிய முதல் நாளே கோகலேவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு காந்திக்குக் கிடைத்தது.
மும்பையில் காந்தியும் கஸ்தூரிபா-வும் சான்டாகுரூஸ் என்ற பகுதியில் (இப்போதைய உள்ளூர் விமான நிலையம் அமைந்திருக்கும் இடம்) ரேவசங்கர் ஜவேரி வீட்டில் தங்கியிருந்தார்கள். இங்கும் அதே பழைய உணவுப் பழக்கங்கள்தான். இருவருடைய உடல்நலமும் ஓரளவு மேம்பட்டிருந்தது. உணவைவிட, இந்தியா திரும்பிவிட்டோம் என்கிற எண்ணம்தான் அதற்குக் காரணமாக இருந்தது.
ஜனவரி 9 அன்று, அதாவது, காந்தி மும்பைக்கு வந்திறங்கிய முதல் நாளில், ‘தி பாம்பே கிரானிக்கிள்’, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ்கள் அவரைப் பேட்டியெடுத்தன. அவருடைய அப்போதைய மனநிலை இந்தப் பேட்டிகளில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.
‘நான் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் இந்தியாவை விட்டு வெளியில் வாழ்ந்திருக்கிறேன். குறிப்பாக, முந்தைய 13 ஆண்டுகளுக்குமேலாக நான் இங்கு வரவே இல்லை. அதனால், தாய்நாடு திரும்புவது என் மனைவிக்கும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’ என்றார் காந்தி. ‘மும்பை மக்கள் எங்களுக்குக் கொடுத்த அன்பான, மனநிறைவான வரவேற்பு அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்கிவிட்டது.’
Add Comment