கூட்டுவது பெருக்குவது சமைப்பது தொடக்கம், இருதய சத்திர சிகிச்சை வரை ரோபோக்களை வைத்து ஏராளமான காரியங்களைச் செய்துவிட்டது உலகம். எனினும் இவை அனைத்திலும் பார்க்கப் பிரமாண்டமான ஒரு பணியை, எதுவித மனிதத் தலையீடும் இன்றி, செய்து முடித்திருக்கின்றன சீன ரோபோக்கள். 158 கிமீ நீளமான ஒரு நெடுஞ்சாலையை, இந்த இயந்திரங்கள் மட்டுமே இணைந்து மொத்தமாகத் திருத்திச் செப்பனிட்டு இருக்கின்றன. அதாவது, தனியாக!
பாதை திருத்துவதெல்லாம் மிகப் பாரமான, மிக நுட்பம் நிறைந்த, முப்பரிமாணம் கொண்ட, நீண்ட நாள் வேலை. இதனைப் பொறுப்பேற்று, நிஜ மனிதர்களைப் போலவே செய்வதென்பது, கட்டிடத் துறையிலும் சரி, செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் சரி, ஒரு பெரிய திருப்பம். சீனா உலகை விட எப்போதும் கொஞ்சம் முன்னணியில் இருக்கின்றது என்பது உண்மைதான்.
ஓர் ஆசிய நாடு, இத்தனை பெரிய எட்டு வைத்திருப்பதை, மேற்குலகம் நிச்சயம் வியந்து பார்க்கும். இந்த நெடுஞ்சாலை, பீஜிங்- ஹாங்காங்- மகாஉ நகரங்களை இணைப்பதாகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன், உலகத்திலேயே மிக மோசமான சாலை நெருக்கடி இடம்பெற்ற வீதி. குறித்த ஒரு தினத்தில் எழுநூற்றைம்பது மில்லியன் மக்கள் அந்தச் சாலையில் சிக்கிக் கொண்டனர். சீனச் சனத் தொகையின் பாதி. மிக முக்கியம் வாய்ந்த நகரங்கள் சம்பந்தப்படும் பாதை என்பதால் வாகனங்கள் போகாத கணமென்று ஒன்று இங்கு கிடையாது. இந்த நிலைமையில் மனிதர்களை வைத்து இதன் குழிகளை மாதக் கணக்கில் மூடுவதென்பது, எவ்வளவு கடினமான காரியம்?
Add Comment