அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எல்லாம் கலவரமானார்கள். அரசு உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு எழுந்து அறிக்கைவிட்டது. ராணுவமும் பொலிஸும் அருகம்பைக்குப் படையெடுத்தன.
சரி, அது என்ன அருகம்பை? இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் என்ன? அப்படி என்ன அறிக்கையை அமெரிக்கா விடுத்தது ?
‘Arugam Bay’ என்பது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு குடா. அதன் கடற்கரையின் வனப்பும், தரைத் தோற்றமும் லட்சக்கணகான சுற்றுலாப் பயணிகளின் நிரந்தர சரணாலயம். அதுவும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னொரு ஜெரூசலம் போன்றது. ’ Surfing’ எனப்படும் படகு விளையாட்டு இவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். ஏப்ரல் முதல் அக்டோபர் காலங்களில் அருகம்பே இஸ்ரேலியர்கள் உட்பட இதர நாடுகளின் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். அந்நியச் செலாவணியை கொட்டோ கொட்டென்று கொட்டி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆக்சிஜனை வழங்கும்.
Add Comment