விமலாதித்த மாமல்லன்
‘அதிகாலை நான்கு மணிக்கு கிண்டியில் இருங்கள்’ என்று சிபிஐ இன்ஸ்பெக்டர் லயனல் சொல்லியிருந்ததால் அலாரம் வைத்து எழுந்துகொண்டார் பெஸண்ட்நகர் குவார்ட்டர்ஸில் குடியிருந்த நரஹரி. இதோ இதோ என்று புரண்டு புரண்டு எழுந்திருக்கத் தமக்கு எப்படியும் 20 நிமிடம் ஆகிவிடும் என்பதால் டிராபிக் இல்லாத நேரத்தில் 15, 20 நிமிடம் கூட ஆகாத கிண்டிக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக அலாரம் வைத்திருந்தார்.
செங்கல்பட்டில் இருந்த மதுராந்தகம் ரேஞ்சிற்கு மாற்றலில் வரும்போதுகூட, பையனைப்போலப் படு உற்சாகமாக இருந்த ஐம்பதைத் தாண்டிய அவர், மின்வண்டியில் போகவர மூன்று மணிநேரம்; அங்கிருந்து ஆபீஸுக்கு ஆட்டோ; ஆபீஸிலிருந்து, மதுராந்தகம் உத்திரமேரூர் என்று எங்கெங்கோ இருந்த யூனிட்டுகளுக்கு கம்பெனி ஜீப்பிலும் வேனிலும் பெண்டு நிமிரப் போய் எக்ஸ்போர்ட் கொடுத்துவிட்டு வரவேண்டியிருந்ததில், செங்கல்பட்டு ஆபீஸுக்கு வந்த ஆறே மாதத்தில் இருந்தாற்போலிருந்து திடீரென ஒரு நாள் வயதாகிவிட்டார். இவ்வளவு அலைச்சலுக்கும் மருந்தாக இருந்தது, கண்ட்டெய்னருக்கு இவ்வளவு என ஏற்றுமதிக்கு அவர் பங்காக வந்துகொண்டிருந்த பணம் மட்டும்தான்.
ஒருவழியாக அவர் எழுந்தபோது மழை கொட்டோ கொட்டெனக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. தாள் போடப்பட்டிருந்த பாலகனிக் கதவைத்தாண்டி நேரடியாகத் தலைமீதே விழுவதைப்போலக் கேட்டுக்கொண்டிருந்தது ஹோவென்ற இரைச்சல்.
‘போகமுடியுமா’ என்றாள் மனைவி.
Add Comment