29. தெய்வங்களின் உரையாடல்
நான் கன்னுலா. கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து புறப்பட்டு, ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் ஊற்றை அடைந்து, அங்கிருந்து நதியின் தடம் பிடித்து நடந்துகொண்டிருக்கும் சாரனின் இளைய சகோதரி. இவ்விதமாகத் தலையைச் சுற்றிச் சொன்னால்தான் சரித்திரத்துக்குப் புரியுமென்பதால் சொன்னேன். நிலம் ஆண்ட மன்னர்கள் நூற்றுவருண்டு. நீராண்ட மாமன்னன் விருத்திரனின் பெயரை என் பெற்றோர் அவனுக்கு ஆசை ஆசையாக வைத்தார்கள். இளம் வயதில் ‘விருத்திரா’ என்று என் பெற்றோரைப் போலவே நானும் அவனை அழைக்க மிகவும் விரும்பினேன். ஆனால் எங்கள் குலத்தில் அந்த வழக்கமில்லை. அவன் என்றென்றும் என் மரியாதைக்குரிய மூத்த சகோதரன். தன் உதிரத்தின் மிச்சத்தை எனக்கு வைத்து உயிரூட்டியவன். இன்னொரு தகப்பனாக எனக்கிருந்த பூரணன். இச்சரிதத்தில் எங்குமே அவன் தன் பெயரை வெளிப்படுத்தப் போவதில்லை என்பதால் அவனுக்குரிய ஆசனம் கிடைக்காமல் போய்விடக் கூடாதல்லவா? அதனால்தான் இடையில் குறுக்கிட்டு நான் உச்சரித்து வைக்கிறேன். அவன் விருத்திரன்.
சிலதெல்லாம் எனக்குத் திகைப்பாக இருக்கிறது. எங்கள் கின்னர பூமியை ஆரியர்கள் எப்படியெல்லாம் ஆக்கிரமித்து, நாசம் செய்து, களவாடினார்கள் என்று எங்கள் குலத்து மூப்பர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த காலத்தில் அப்படிப்பட்ட யுத்தங்களைக் கண்டதில்லை. அந்தக் குறை எனக்கு வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. என் சகோதரனின் மனத்துக்குள் எத்தனை பேர் அவனறியாமல் கள்ளத்தனமாகப் புகுந்து ஆக்கிரமிக்கிறார்கள்! எல்லோரும் ஆரியர்கள். ஒருவன் ரிஷி என்கிறான். ஒருவன் பிரம்ம ரிஷி என்கிறான். இன்னொருவன் தன்னைச் சூத்திரன் என்று சொல்லிக்கொண்டாலும் அவனும் ஆரியன்தான். எனக்குத் தெரியவில்லை. இன்னும் எத்தனை எத்தனை பேர் அவன் மனத்துக்குள் புகுந்து தமது சரிதத்தைப் புதைத்துவிட்டுப் போகப் போகிறார்களோ.
ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? அந்த சூத்திர முனியைத் தவிர மற்ற யாரும் நேரடியாக அவன் மனத்தில் தமது எண்ணங்களைப் புதைப்பதாகச் சொல்வதேயில்லை. அதர்வன், சூத்திர முனியின் மனத்தில் திருத்தம் செய்வதாகச் சொல்கிறான். அங்கீரசன், அதர்வனின் சிந்தைக்குள் அவனறியாமல் செயல்படுவதை ஒப்புக்கொள்கிறான். ஆனால் உண்மை என்ன? எல்லாம் வந்து சேரும் பெருநிலமாக என் சகோதரனின் மனமே விரிந்து பரந்திருக்கிறது. அதைக்கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் ஆரியரின் மனம்தான் ஆகப் பெரிய விசித்திரம்.
Add Comment