30. உளக் குவிப்பு
முன்பொரு முறை அந்த பிராமண ரிஷி என்னிடம் சொன்னான்,
‘சூத்திர முனியே, நீ ஒரு சராசரி மனிதன்தான். ஆனால் சராசரி மனிதர்களால் எட்ட இயலாத உளக் குவிப்பு உன்னிடம் இருக்கிறது. தருணத்தின் தேவைக்கேற்ப நீ உன் தேகத்தையும் சித்தத்தையும் ஒற்றைப் புலனாக்கிக்கொண்டுவிடுகிறாய். இது அபூர்வமானது.’
நானொரு முனி என்பதை நான் உணர்ந்திராத காலத்தில் நடந்த சம்பவம் அது. பின்னாளில் அவன்மீது எனக்கு உண்டான வெறுப்பெல்லாம் அப்போது இல்லை. தீராத ரகசியப் பரவசமும் மேலாக ஒரு சிறிய ஏமாற்ற உணர்வும் மட்டும்தான் இருந்தது. தனது மாணவர்களுக்கு அவன் போதிக்கும் மந்திரங்களை நான் தொலைவில் இருந்து கேட்டு உள்வாங்கி உருவேற்றுவதைக் கண்ட பிறகு அவன் அப்படிச் சொன்னான்.
இப்போது அவன் எனக்கு முற்றிலும் வேண்டாத ஒருவனாகிவிட்டாலும் அவன் சொல் சாரமற்றதென எண்ணும் அளவுக்கு நான் மூடனல்லன். என்னைப் பற்றிய சொற்கள் மட்டுமல்ல. அவன் உதிர்க்கும் எதுவுமே. எப்போதுமே. எக்காலத்திலுமே. இப்போது இதனைக் குறிப்பிட ஒரு காரணம் உள்ளது.
என் உளக்குவிப்பு பற்றி அவன் சொன்னது உண்மையே. கடுந்தவக் காலத்துக்கு முன்பிருந்தே அது என்னால் முடியும். சிறு வயதில் எங்கள் வீட்டில் ஹிக்காலங்களில் ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும். என் தாய் பாடுபட்டுத் தீயினை உண்டாக்கி, உணவைத் தயாரித்து முடித்தபிறகு இறுதியாகக் குடிப்பதற்கு நீரினைச் சுட வைப்பாள். எல்லாம் முடிந்ததெனத் தணலை அகற்றி, உத்தானத்தைச் சுத்தம் செய்து முடித்துவிட்டு உண்ண அமர்ந்தால், நீர் குளிர்ந்துவிட்டிருக்கும். மீண்டும் கற்களை அடுக்கிச் சுள்ளிகளை இட்டு, தீயை உண்டாக்கப் போராடத் தொடங்குவாள்.
Add Comment