கனடா – இந்தியா உறவை இன்னும் கொஞ்சம் சிக்கலாக்கியுள்ளது வாஷிங்டன் போஸ்ட். கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் மீதான தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அந்தக் கட்டளையைப் பிறப்பித்தவர் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித் ஷா. இதற்கான ஆதாரங்களைக் கனடா நாட்டின் புலனாய்வு அமைப்புகள் திரட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் இப்படி செய்தி வெளியானது. இந்த செய்தி தொடர்பான தகவல்களைக் கனடாவிலிருந்து கொடுத்தது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேவிட் மோரிசன் என்கிறார்கள். “பத்திரிகையாளர் என்னை அழைத்து இந்த நபரா எனக் கேட்டார். நானும் அந்த நபர் தான் என்பதை உறுதி செய்தேன்” எனச் சொல்லியிருக்கிறார் டேவிட் மோரிசன்.
சிங்கப்பூரில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்த கூட்டமொன்றில் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது இந்த ரகசியக் கூட்டம் பற்றிய செய்திகள். கனடாவுக்கான பாதுகாப்பு ஆலோசகரும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் காவல்துறையின் ஓர் உயரதிகாரியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கனடாவில் நடக்கும் கொலைகளுக்கு இந்திய அரசின் உளவுத்துறை அமைப்புகள் தான் காரணம். பிஷ்னாய் கேங்கின் துணையோடு இதனைச் செய்கிறார்கள் என ஆதாரத்தைக் காண்பித்திருக்கிறார்கள். பிஷ்னாய் யாரென்றே தனக்குத் தெரியாது எனச் சொன்ன அஜித் தோவல் பின்னர் “பிஷ்னாய் எங்கிருந்தாலும் இப்படியான கொலைகளைச் செய்யக்கூடியவன் தான். ஆனால் இந்தக் கொலைகளுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனச் சொல்லியிருக்கிறார். போகிற போக்கில் இங்கே இப்படி ஒரு சந்திப்பு நடந்ததாக யாரிடமும் சொல்லாதீர்கள் என்பதையும் மறக்காமல் சொல்லிவிட்டே வந்திருக்கிறார். அத்தனையும் ஊடகங்களில் வெளிவந்துவிட்டன.
Add Comment