34. ரதம்
தனது வினாக்களின் நியாயம் அல்லது தகுதி குறித்து அந்த சூத்திர முனிக்கு எப்போதும் சிறியதொரு அகம்பாவம் உண்டு. நான் அதை ரசித்தேன் என்று சொல்ல இயலாது. ஆனால் என்னால் அதை மதிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அவன் உணர்ச்சிமயமானவனாக இருந்தான். ஏனோ எனக்கு அது எப்போதும் உவப்பற்றதாகவே இருந்தது. உணர்ச்சிகளை முற்றிலும் துறந்து மனித குலம் வாழ இயலாதென்பது தெரியும். அதன் தாஸ்யரூபமாகத் தன்னை வடிவமைத்துக்கொள்வது நல்லதல்ல என்பதை எப்படியாவது அவனுக்குத் தெரிவிக்க விரும்பினேன். நான் அதர்வன். சில காரணங்களால் என்னால் அவனுடன் நேரடியாக ஓர் உரையாடலைத் தொடங்க இயலாது. எதைச் சொல்லத் தொடங்கினாலும் அவனது முதல் சொல், என்னை ஏற்றுக்கொள் என்பதாக இருக்கும். வெளிப்படுத்த இயலாத சில ‘முடியாது’களை உடைத்தால் ஒன்றும் இராது. இப்படிச் சொல்வது சரியா என்று சிறிது யோசிக்கிறேன். உடைத்தால் ஒன்றும் புலனாகாது என்று திருத்த விரும்புகிறேன்.
அன்றைக்கு அவனது எலும்பு முறிவுக்கு நான் சிகிச்சை செய்ததை அவன் அறிய மாட்டான். முறிந்த அவனது எலும்பினை அருந்ததி வைத்துக் கட்ட ஒரு தர்ப்பத்தை உருவேற்றிச் செலுத்தினேன். அத்தர்ப்பம் அவனது சிரத்தில் இறங்கி, காலின் உடைந்த பகுதியைத் தொட்டு உதிர்ந்ததை அவன் கண்டான். கானகத்தின் புழுதியில் பறந்து வந்து விழுந்த குப்பையென்று நினைத்துவிட்டான். அவனது புத்தியெல்லாம் என் குரலின்மீது இருந்தது. நான் உச்சரித்த மந்திரங்களின்மீது இருந்தது. தனக்குள்ளே நடப்பது என்னவென்பதையும் கண்டுணர முடியாத அளவுக்குப் பதற்றம் கொண்டவனுக்கு எதனைச் சொல்லிப் புரிய வைக்க இயலும்?
எனக்கொரு தருணத்தை நினைவுகூர வேண்டும். அவனது நினைவில் அது எங்கோ புதைந்துகிடக்கிறது. என்றாவது ஒருநாள் அந்த சார சஞ்சாரனிடம் அவன் அதை நிச்சயமாகச் சொல்வான் என்று தெரியும். விவரிக்கும்போது அவனுக்கு உதிரம் கொந்தளிக்கும். கண்கள் சிவந்து உதடு துடிக்கும். தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் தத்தளித்துத் தத்தளித்துத் தணியத்தான் செய்வான். தவமிருந்தென்ன. முனியாகி என்ன. உணர்ச்சிகளை விலக்கி நோக்க இயலாதவனுக்கு உண்மையின் சொரூபம் ஒருபோதும் புலப்படப் போவதில்லை.
Add Comment