30. ஆனைக்கொரு கணக்கு, பூனைக்கொரு கணக்கு
சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வறுவல் பொட்டலத்துக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று சலுகை அறிவித்திருந்தார்கள். அந்த வறுவல் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் இரண்டும் இரண்டும் நான்கு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன். வீட்டுக்கு வந்து அந்தப் பொட்டலங்களை என் மனைவியிடம் கொடுத்தேன்.
என் மனைவி அதில் இரண்டு வறுவல் பொட்டலங்களைமட்டும் மேசைமீது வைத்தார், மீதியிருந்த இரண்டையும் உள்ளுக்குள் எங்கோ ஒளித்துவைத்துவிட்டார்.
சிறிது நேரத்தில், குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பினார்கள், ‘ஐ, சிப்ஸ்’ என்று ஆசையுடன் எடுத்துப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள், நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம்.
பத்து நிமிடத்தில் பொட்டலங்கள் தீர்ந்துவிட்டன. எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டோம்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு, ‘ஏதாவது சாப்பிடறதுக்கு இருக்கா?’ என்று எல்லாரும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம். ஒளித்துவைத்திருந்த அந்த வறுவல் பொட்டலங்களை வெளியில் எடுத்துவந்தார் என் மனைவி. எல்லாரும் அவற்றை ஆசையுடன் தின்று தீர்த்தோம்.
Add Comment