30. ஒன்றானது
ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும் நிலமும் கலந்த பூமியில் உயிரினங்கள் தோன்றின. தாவரங்கள் தோன்றின. பிறகு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்.
அவனுக்கு ஆறாவது அறிவு தோன்றியது. அவன் சிந்திக்கத் தொடங்கியதால் சிரமப்பட்டான். சிரமங்களைத் தவிர்க்க வழி தேடத் தொடங்கினான். குழுக்கள் உருவாயின. பிறகு தலைவர்கள் உதித்தார்கள். அவர்களுக்கு ஆசை பிறந்தது. அவர்கள் அடுத்தடுத்த குழுக்களையும் சேர்த்து ஆள விரும்பினார்கள். நிலங்களை அபகரித்தார்கள். கால்நடைகளை அபகரித்தார்கள். கோட்டைகளைச் சூறையாடினார்கள். ஒவ்வொரு ராஜனுக்கும் தானே உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள அவசியம் உண்டானது.
அச்சத்தின் வழி அல்லாமல் இன்னொன்றின் மூலமாக எண்ணியதைச் சாதித்துக்கொள்ள இயலாதென்று மதியூகிகள் அவர்களுக்கு போதித்தார்கள். அச்சங்களை நிறுவனமாக்கும் அவசியம் அதனால் ஏற்பட்டது. மன்னர்கள் மதியூகிகளைத் தமக்கு அருகே அமர்த்திக்கொண்டார்கள். அவர்கள் மதங்களை உருவாக்கினார்கள்.
மதங்கள் கடவுள்களைப் பிறப்பித்தன. கலைஞர்கள் கடவுள்களுக்குக் கதைகளைத் தைத்தார்கள். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி கோடிக் கதைகள் புவியெங்கும் பிறந்தன. கடவுள்களைக் கதைகள் வளர்த்தன. மதம் அவற்றினுள் அச்சங்களைப் பூரணமாகப் பொதிந்து வைத்தது. அடிபணிவதன்றி இன்னொன்றின் மூலம் கதி மோட்சமில்லை என்று நம்பச் செய்வதில் இது பெரும்பங்கு வகித்தது.
Add Comment