புதிது புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. மக்கள் சேவை மட்டுமே நோக்கம் எனில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தாலே போதும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மாணவர் படிக்க நிதியளிக்கலாம். அரசு போகாத மலைக் கிராமங்களைத் தேடிப் போய் சாலை அமைக்கலாம். அரசின் பார்வை படாத குக்கிராமங்களில் மருத்துவ மையம் திறக்கலாம். பசி என்று வருவோருக்கு நாள்தோறும் சோறிட்டால் கூட உன்னதமான மக்கள் சேவைதான்.
இம்மாதிரியான மக்கள் சேவையில் புகழும் மனநிறைவும் கிடைக்கும். கூடவே வருமான வரிச் சலுகையும் கூடப் பெறலாம். வாழ வைத்த மக்களுக்குத் திருப்பிச் செய்ய இதுவே போதும். போதாதென்று அரசியலுக்கு வருவதென்றால் அதிலும் பிழை இல்லை. வெளிப்படையாக மக்களுக்காக எனச் சொல்லிக் கொண்டாலும் நோக்கம் என்னவோ முதல்வர் நாற்காலிதான்.
தமிழ்நாட்டில் முதல்வர் பதவிக்கும் திரைத்துறைக்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்ததே. மக்களாட்சியில் நாட்டின் குடிமக்களில் இருந்து யார் வேண்டுமானாலும் தலைவன் ஆகலாம். மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எல்லாருக்குமானது. திரைத் துறையினரும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் திரைத்துறையில் கிடைக்கும் புகழ்வீச்சு மட்டுமே ஒரு தகுதியாக மாறிவிடாது.
Add Comment