36. குருகுலம், சாந்திநிகேதனம்
1915 ஃபிப்ரவரி 15. காந்தி மும்பையிலிருந்து வங்காளத்துக்குப் புறப்பட்டார்.
காந்தி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில் கப்பலில் வங்காள மொழி படித்தார் என்று பார்த்தோம். இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கும்போது அவர் ஏன் வங்காளத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? அந்தப் புதிருக்கான விடை, அவருடைய இந்த வங்காளப் பயணத்தில் கிடைக்கப்போகிறது.
இந்திய வரைபடத்தில் மேற்கு எல்லையாக உள்ள குஜராத்திலிருந்து கிடைமட்டமாக ஒரு கோடு போட்டால் கிழக்கு மூலையில் வங்காள மாநிலத்தைக் காணலாம். அது இன்றைய வங்காளம். 1915ல் அது இன்னும் பெரிதாக இருந்தது. அதாவது, இப்போது தனி நாடாகிவிட்ட ‘வங்காளதேச’மும் சேர்ந்து ஒன்றுபட்ட, மிகப் பெரிய வங்காளமாக இருந்தது.
காந்தி கோகலேவைப் பார்ப்பதற்காகத் தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டனுக்குக் கிளம்பிய அதே நேரத்தில், அவருடைய ஃபீனிக்ஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், தொண்டர்கள் என்று சுமார் இருபத்தைந்து பேர் அங்கிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்கள், ‘நீங்கள் சட்டுப்புட்டென்று கோகலேவைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள், நாம் இந்தியாவில் சந்திப்போம், அங்கு ஒரு குடியிருப்பை அமைப்போம்’ என்று திட்டமிட்டுக்கொண்டார்கள்.
Add Comment