38. கையாள்
கன்னுலா அந்தப் பட்சியிடம் சொல்லியனுப்பிய தகவலைத் தெரிந்துகொண்ட பின்பும் நான் எதனால் அந்த முனியுடன் கூடவே என் பிரயாணத்தைத் தொடர்ந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவளுக்கு முனியைப் பற்றி என்ன தெரிந்தது, எவ்வளவு தெரியும் என்பதை நான் அறியேன். அவன் ஒரு பூரண அயோக்கியன் என்பதற்கு அவளிடம் திட்டவட்டமான ஆதாரமாக ஏதேனும் இருந்தாலுமேகூட நான் அவனைவிட்டு விலகப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன்.
எண்ணிப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. நானொரு சார சஞ்சாரன். எதையும் ஐயத்துடனே அணுகவேண்டியது என் தொழில் சார்ந்த ஒழுக்கம். தவிர, நான் மேற்கொண்டிருந்த பணி அத்தனை எளிதானதுமல்ல. அந்த பிராமணனைக் கொலை செய்யும் முயற்சியில் எனக்கு முன்னரும் வேறு இனத்தார் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். யாரும் வென்றிராததால்தான் பணி எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதுவே எனக்கு வியப்புத்தான். ஒரு பிராமணனைக் கொல்வது அத்தனை சிரமமாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை. என்னுடைய அவ்வெண்ணத்தைத் திருத்தியதுதான் அந்த சூத்திர முனி எனக்குச் செய்த முதல் நன்மை.
‘சாரனே, அவன் மனிதன்தான். பிராமணன்தான். ஆனால் அது மட்டுமல்ல’ என்று அவன் சொன்னான்.
‘உன்னைப் போலப் பிசாசுகளை வசியம் செய்து கையாளாக வைத்திருப்பானா?’
Add Comment