அந்தந்த நேரத்து நியாயம்
ஆயகலைகள் அறுபத்து நான்கு. அத்துடன் இப்போது ஒன்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அறுபத்தைந்தாவதாக, ஒரு நியூ அட்மிஷன். ப்ராம்ப்ட் எஞ்சினியரிங். சுருங்கச் சொன்னால் ஏ.ஐயிடம் வேலை வாங்கும் கலை. இதுவே குட்டிச்சாத்தான் வசியக் கலை.
வேலை செய்வது எளிது. ஆனால் பிறரிடமிருந்து வேலை வாங்குவது கடினம். நாமொன்று சொன்னால் அவர்கள் வேறொன்றாகப் புரிந்துகொள்வர். மனிதர்களே இவ்வாறெனில், ஏ.ஐ என்னும் ஏலியன் குல ஜந்து எப்படியெல்லாம் அடம்பிடிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
மனிதர்களென்றாலாவது அதட்டி வேலை வாங்கலாம். சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று உத்தியோக பயம் காட்டலாம். சாம, தான, பேத, தண்டம் என்று படிப்படியாக மிரட்டிப்பார்க்கலாம்.
ஆனால் ஏ.ஐ விசயத்தில் என்ன செய்வீர்கள்? கண்ணுக்குத் தெரியாதது. உயிரற்றது. மரணமுமற்றது. நம்மைப் போல அச்சம், வெகுளி, உவகை, மருட்கை போன்ற உணர்வுகளும் கிடையாது.
காலம் காலமாய் மனிதர்கள் தம்மிடம் வேலை செய்யும் இன்னொரு மனிதனை எவ்வாறெல்லாம் ஏவல் செய்தனரோ அவையெல்லாம் ஏ.ஐயிடம் செல்லாது. இது முற்றிலும் புதிது. மனிதகுல வரலாற்றில் இதுகாறும் நிகழாதது.
நிற்க. “இல்லையே… இடிக்குதே… நெறய மெஷின்லாம் இருக்கு. அதுட்டல்லாம் வேல வாங்கத் தான செய்றோம்… ஏஐயும் அப்டித் தான…?” என்றால், கிடையாது. நிறைய வேறுபாடுகள் உள்ளன.
Add Comment