ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டுக் கடந்து விடுவதோடு நமது கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த கணினித் தொழில்நுட்பம் மூலமாக பெரும் பணம் சம்பாதித்த பில்கேட்ஸை அறியாதவர்கள் கிட்டத்தட்ட யாரும் இருக்க மாட்டார்கள். இன்றைய தேதியில் உலகின் முதல் பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க்கும் செய்திகளில் நீக்கமற நிறைந்திருக்கிறார். செய்திகளே இல்லாத போதும் செய்திகளை அவரே உருவாக்கி ஊடகங்களில் இடம்பெறும் சூத்திரம் தெரிந்தவர். இவர்கள் மட்டும் தான் சாதனையாளர்களா? இல்லை. இதே பட்டியலில் இடம்பிடித்த இன்னும் ஏராளமானோர் இருக்கின்றனர். சத்தமில்லாமல் சாதனைகளைச் செய்துவிட்டு சாதாரணமாக ஒரு நாளை கடந்துபோகிறார்கள்.
தைவானில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹூவாங் சிறுவயதில் பள்ளியில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மளிகை வாங்கச் சென்ற தன் அம்மாவைப் பணமில்லாததால் அவமானப்படுத்தினார் ஒரு கடைக்காரர். இனியொருமுறை இது நிகழக்கூடாதெனப் பள்ளிப்படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் சென்றார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அமன்சியோ ஒர்டேகா. உலகப் பணக்காரர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்திலிருக்கிறார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லஸ் ஸ்லிம்மின் பெற்றோர் லெபனானிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருபத்து இரண்டு நாடுகளில் தொலைத் தொடர்பு சேவையைத் தரும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி மெக்சிகோவின் வாரன் பஃபெட் என அறியப்படுகிறார். படித்துக்கொண்டே கல்லூரி விடுதியின் ஓர் அறையில் மைக்கேல் டெல் ஆரம்பித்த ஒரு சிறிய வணிகம் ஐ.பி.எம், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தந்தது. மருத்துவராக வேண்டும் என்ற தன் பெற்றோரின் விருப்பத்தைப் பொருட்படுத்தாது அவருக்குப் பிடித்த துறையில் சாதித்து இப்போதும் முன்னணியில் இருக்கிறார் மைக்கேல் டெல்.
பதினைந்தாண்டுகள் வேலை செய்த நிறுவனம் ஓர் இரவில் இனி உனக்கு வேலை கிடையாது எனச் சொல்லிவிட்டது. அப்படி வெளியில் அனுப்பப்பட்ட மைக்கேல் புளூம்பர்க் ஆரம்பித்த நிறுவனம் இன்றைக்கு நூற்று இருபது நாடுகளில் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கு வேலை கொடுக்கிறது. சொந்தமாக நிறுவனம் தொடங்கினால் மட்டும் தான் உலக பணக்காரராக முடியும் என்ற உண்மையைப் பொய்யாகியவர் ஸ்டீவ் பால்மர். மைக்ரோசாஃப்ட்டில் பில்கேட்சுக்கு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தலைமைச் செயலதிகாரியாக உயர்ந்து இன்றைக்கு பில்கேட்ஸை விட அதிக சொத்து மதிப்போடு பட்டியலில் இருக்கிறார்.
ஃபேஷன் துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத நாடான பிரான்சில் பிறந்த பெர்னார்ட் அர்னால்ட் தனது நிறுவனத்தின் கீழ் எழுபத்தைந்து பிராண்ட்களை வைத்திருக்கிறார். உயர் ரக ஃபேஷன் பொருட்களைத் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்யும் பெர்னார்ட் நூற்று எழுபது பில்லியன்களுக்குச் சொந்தக்காரர். இரண்டுமுறை முயன்றும் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. சரி, வெறும் முப்பது பேருடன் ஒரு நிறுவனம். அதைத் தொடர்ந்து நடத்தினால் போதும் என லேரி எலிசன் ஆரம்பித்த ஆரக்கிள் நிறுவனத்தில் இன்றைக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
வாழ்க்கையில் இவர்கள் கடந்து வந்த பாதையை அறிவது அவசியம். என்ன செய்ததால் இவர்கள் இந்த உயரத்தை அடைந்தார்கள்? எந்த சக்தி இவர்களைச் செலுத்தியது? எது இவர்களைச் செல்வந்தர்களாக்கியது? பணம், அதிர்ஷ்டத்தால் சேருவதல்ல. திட்டமிட்ட உழைப்பே அதன் முதல். எதை எப்படி இவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று தெரிந்துகொண்டு நாமும் சிறிது முயற்சி செய்து பார்ப்போம்.
Add Comment