ஆசியச் சந்தையில் பண அறுவடை
தொழில்நுட்ப உலகில் கணினித் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக டெல் நிறுவனம் இன்றைக்குச் சந்தையில் இருக்கிறது. அமெரிக்காவில் உருவான இன்னொரு தொழில்நுட்பச் சகாப்தம்.
தனிப்பட்ட கணினிகளின் சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நிறுவனத்தை மைக்கேல் டெல் 1984ஆம் ஆண்டு தொடங்கினார். மைக்கேல் டெல் அமெரிக்காவின் டெக்ஸாஸில் ஹூஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே மின்னணுப் பொருட்களின் மீது ஆர்வம் அதிகம். தொலைப்பேசி, தொலைக்காட்சி, வானொலி என எதுவானாலும் பிரித்து மேய்ந்து பிறகு மீண்டும் அதேபோல சேர்த்து வைப்பது அவருக்கு வழக்கம். உள்ளே அப்படி என்ன தான் இருக்கிறது எனப் பார்த்துவிடும் ஆர்வம் அதிகம்.
பள்ளியிலிருந்து திரும்ப வீட்டுக்குச் செல்லும்போது கடைகளை நின்று வேடிக்கை பார்ப்பது அவர் பழக்கம். அவர்கள் கடையை மூடும் வரையோ அல்லது விரட்டி விடும் வரையோ அங்கே நின்று வேடிக்கை பார்ப்பார். எப்படியாவது ஒரு கணினியை வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அப்போது பத்திரிகையில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் Apple II கணினி விளம்பரம் அவரை ஈர்த்தது. அதன் அப்போதைய மதிப்பு 1300 டாலர்கள். படிக்கும்போதே பகுதி நேரமாகப் பல வேலைகளைப் பார்த்தார் மைக்கேல் டெல். அதன் மூலமாக வந்த வருமானத்தை வைத்து அவருடைய பதினான்காவது பிறந்த நாளின்போது Apple II கணினியை வாங்கினார்.
Add Comment