கூட்டாளியின் பங்கு
உலகப் புகழ்பெற்ற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைப்பது இன்றைக்கும் பல மாணவர்களுக்குக் கனவாக இருக்கிறது. 1980ஆம் ஆண்டு அந்தப் பல்கலைக்கழகத்தில் முதுகலை நிர்வாகவியல் படித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படிப்பைப் பாதியில் கைவிட்டார். இருபத்தொன்பது ஊழியர்கள் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்வதற்காக அந்த முடிவை எடுத்திருந்தார்.
இந்த முடிவு அவரது பெற்றோருக்குக் கவலையை அளித்தது. ஏதோ கம்ப்யூட்டர், புரோகிராம் என சொல்லிக்கொண்டு திரியும் அந்த நிறுவனத்தின் மீது ஸ்டீவ் பால்மரின் அம்மாவுக்கு நம்பிக்கையில்லை. யார் இந்தக் கம்ப்யூட்டர்களை எல்லாம் வாங்கப்போகிறார்கள்? அதனைப் பயன்படுத்துவதால் என்ன பெறப்போகிறார்கள்? இந்த அளவில் தான் ஸ்டீவ் பால்மரின் பெற்றோர் அந்த நிறுவனத்தை நினைத்திருந்தார்கள். சரி, இப்போது வேலைக்குச் செல்கிறேன். ஒத்துவரவில்லை என்றால் மீண்டும் படிக்க வந்துவிடுகிறேன் என உறுதியளித்துவிட்டு அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஸ்டீவ் பால்மர். அந்த நிறுவனத்தின் பெயர் மைக்ரோசாஃப்ட்.
1956ஆம் ஆண்டு டெட்ராய்ட் என்னும் அமெரிக்க நகரத்தில் பிறந்தவர் ஸ்டீவ் பால்மர். ஸ்டீவின் தந்தை ஃப்ரெடெரிக் ஹென்றி பால்மர் சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். 1948ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். ஸ்டீவ் பால்மர் தான் அவரது குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருந்தன.
Add Comment