130. ‘கே’ பிளான்
“நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி 1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான் முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். 1950களின் மத்தியில் கூட ஒரு முறை எழுந்தது. அப்போதும், அதற்கு நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு.
இந்தக் கேள்விக்கு நேரு ஒரு போதும் நேரிடையாக பதில் சொன்னதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிச் செய்தால், இன்னார்தான் தனக்கு அடுத்த இடம் என்பதே நேருவே தெரிவித்துவிட்டார் என்று ஆகிவிடும் அல்லவா? அதில் நேருவுக்கு உடன்பாடில்லை. காரணம், காங்கிரஸ் கட்சியில் நிறைய கோஷ்டிகள் இருந்தன. ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒரு தலைவர் இருந்தாலும் அவர்களில் யாருமே நேரு அளவுக்கு ஆளுமை கொண்ட, மக்களைக் கவர்ந்த தலைவர்களாக இல்லை.
நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களில் சில மூத்த தலைவர்களும் உண்டு. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களையும் அரவனைத்துப் போக வேண்டும் என்ற காரணத்தால் மந்திரி பதவி பெற்றவர்கள் பலர் என்பதும் அஃக் மார்க் உண்மை.
அது மட்டுமில்லாமல், அவர்கள் எல்லோரும் நேரு என்ன சொன்னாலுலும் மறு பேச்சில்லாமல் தலை அசைப்பவர்களாகவும் இருந்தார்கள்.
அதேசமயம் மூத்த அமைச்சர்கள் சிலர், நேருவைக் கலந்தாலோசிக்காமல், சொந்தமாக முடிவெடுத்து, செயல்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை நேருவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் உண்மை.
மௌவுலானா அபுல் கலாம் ஆசாத் நேருவின் நெருங்கிய நண்பர்தான் என்ற போதிலும் 1958ல் ஆசாத் இறப்பதற்கு இரு ஆண்டுகள் முன்பிருந்து அவருக்கும், நேருவுக்கும் இடையிலான உறவில் விரிசல் இருந்தது.
Add Comment