அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும் அந்தந்த மாநில அரசுகள் தீர்மானிக்கும். நம்மைப் போல அவர்களுக்கு மொழிச் சிக்கல் பெரிதாகக் கிடையாது என்றாலும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் உயிர்நாடியான கல்வித் துறையை மாநில அரசுகளின் பொறுப்பில் விடுவதன் மூலம் கல்வித் தரம் கணிசமாக மேம்பட வாய்ப்புண்டு. அமெரிக்காவின் வளங்கள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கே என்ற டிரம்ப்பின் அடிப்படைச் செயல் திட்டத்தின் தொடக்கமே கல்வித் துறை சார்ந்து மையம் கொண்டிருப்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதனுடன் சேர்த்து யோசிக்க நமக்கு இன்னொன்று இருக்கிறது.
தமிழ் நாட்டில் ‘சமக்ர சிக்ஷா அப்யான்’ என்கிற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் முப்பத்திரண்டாயிரம் ஊழியர்களுக்குக் கடந்த செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. காரணம், திட்ட ஏற்பாட்டின்படி மத்திய அரசு, தமிழ்நாட்டரசுக்குத் தர வேண்டிய அறுபது சதவீதத் தொகையைத் தரவில்லை.
அதாவது, 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 2152 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இது மொத்தத் தொகையில் அறுபது சதம். மீதமுள்ள நாற்பது சதத் தொகையை மாநில அரசு செலுத்தும். மத்திய அரசு தரவேண்டிய தொகையை நான்கு தவணைகளாகத் தரும் என்பது திட்டத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
ஆனால் நடந்தது என்ன? மத்திய அரசு இந்தக் கல்வி ஆண்டுக்குத் தன் பங்காகத் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய முதல் இரண்டு தவணைத் தொகையைத் தரவில்லை. வேறு வழியின்றி தமிழ்நாட்டு அரசே இரண்டு பங்குகளையும் சேர்த்துப் போட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் தர வேண்டிய சூழ்நிலை உண்டானது.
Add Comment