44. சண்டாளன்
மனத்தின் ஒரு துளியைக் கிள்ளி வெளியே சுண்டிவிட்டாற்போல இருள் அடர்ந்து கவிந்திருந்தது. கானகத்தின் தருக்கள் உறங்கத் தொடங்கிவிட்டன. பட்சிகளும் சிறு மிருகங்களும் உறங்கப்போய்விட்டன. பூச்சிகளின் ஓசையும் அடங்கத் தொடங்கியிருந்த பொழுதில் சரஸ்வதி மட்டும் தன் தாளகதி பிசகாமல் சத்தமிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. எத்தனை யுகங்களாக இது ஓடிக்கொண்டிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். எதனைக் குறித்த அச்சமும் இன்றி, எவரைப் பற்றிய எண்ணமும் இன்றி, தனக்கென விதிக்கப்பட்ட பணி பிசகாமல் இயற்கையின் ஒவ்வொரு கண்ணியும் தன் அச்சில் எப்படியோ நின்று நிலைத்துவிடுகின்றன. உழலும் அவதியெல்லாம் மனித குலத்துக்கென்று வகுத்த சக்தியை எண்ணிப் பார்த்தேன்.
அது ஆசைகளை அளித்தது. பிறகு அச்சங்களைத் தருவித்தது. அகங்காரம் வளர்த்தது. விரோதம் மூளக் காரணமானது. யுத்தங்களை வடிவமைத்தது. வெற்றிகளையும் தோல்விகளையும் தீர்மானித்தது. வர்ணங்களையும் வருணங்களையும் உண்டாக்கி விளையாடத் தொடங்கியது. நிம்மதிக்கும் அமைதியின்மைக்கும் இடையிலான தொலைவை விஸ்தரித்துக்கொண்டே சென்று அலைக்கழிப்பில் ஆனந்தக் களிநடம் புரியத் தொடங்கியது. ஆழங்காணவியலாக் கிருஷ்ணத்தின் மையத்தில் நான் உறக்கமற்றுத் தவித்துக்கொண்டிருந்தேன்.
சாரன் உறங்கி ஒரு ஜாமமாகிவிட்டிருந்தது. இரண்டு மூன்று முறை அவனைத் தொட்டுப் பார்த்தேன். அவன் அசையவில்லை. எழுப்பி அமர வைத்து என்ன செய்யப் போகிறேன்? எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லை. சரி, உறங்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுக்கு நான் சொல்லும் விவரங்கள் சார்ந்த பரவசங்கள் இல்லை. அதனாலேயே திகைப்பில்லை. அவனது நம்பிக்கைகளின் எல்லை முடியும் இடத்தில் எனது தவத்தின் சரிதம் தொடங்குவதனாலேயே புரத்தின் சுற்றுச் சுவரில் கால்வைத்து மீதேறி எட்டிப் பார்க்கும் விதமாக மட்டுமே அவனால் என்னையும் என்வழி வெளிப்படுகிற எதையும் அணுக முடிகிறது. தவிர, அவன் என்னை எதிர்பார்த்துத் தன் பிரயாணத்தைத் தொடங்கியிருக்கவில்லை. அவன் உள்ளத்தைத் திறந்து பார்த்த வேளைகளில், என்னையல்ல; யாரையும் அல்லது எதையும் எதிர்பார்த்து அவன் புறப்பட்டிருக்கவில்லை என்பதைக் கண்டேன். இட்ட பணியை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஓர் ஆபத்து என்று வருமானால் தன் சகோதரி துணையிருப்பாள் என்று நினைத்திருக்கிறான். ஆனால் அவளது எல்லை வரையறுத்துக் காட்டப்பட்டுவிட்ட பின்பு அதைக் குறித்து அவன் சிந்திக்கவேயில்லை. சிறியதொரு ஆயுதமும் கைவசம் இல்லாமல் தன் செயலின் மீது கொண்ட அசைக்கவியலாப் பிடிமானத்தை இன்னோர் உறுப்பாக்கிக்கொண்டு அவன் வந்திருந்தான்.
Add Comment