45. கங்கைக்கரைக் கவின்
நாம் பெரும் இரைச்சல் நிறைந்த ஓர் அறையில் இருக்கிறோம். அங்கிருந்து வெளியில் வந்து கதவை இறுகச் சாத்துகிறோம். மறுகணம் அந்த அமைதி நம்முடைய காதுகளிலும் மனத்திலும் இதமாக நிறைகிறது.
ஹரித்வாரிலிருந்து புறப்பட்டுக் கங்க்ரியிலுள்ள மகாத்மா சிரத்தானந்தருடைய குருகுலத்துக்கு வந்த காந்தி அப்படித்தான் உணர்ந்தார். ஏற்கெனவே தன்னுடைய நண்பர் ஆன்ட்ரூஸின் கடிதங்கள் வழியாக அந்தக் குருகுலத்தைப்பற்றி நன்கு அறிந்திருந்த அவர் இப்போது அந்தச் சூழலை நேரில் கண்டு உள்ளம் மயங்கினார், சிரத்தானந்தரைச் சந்தித்துப் பேசி அவருடைய அன்பில் மூழ்கினார்.
குருகுலத்திலிருந்த அனைவரும் காந்தியை மிக நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கிடையில் பேசிய காந்தி, ‘நான் அறிவுரை கொடுக்கும் நிலையில் இல்லை. நான் வழிகாட்டுதலைத் தேடி வந்திருக்கிறேன். தாய்நாட்டுக்குச் சேவை புரியும் எல்லாரையும் நான் வணங்குகிறேன். கடவுள் நம் பணிகளை நிறைவுசெய்துவைக்கட்டும்’ என்றார்.
இதையடுத்து, சிரத்தானந்தர் காந்தியை வரவேற்றுப் பேசினார், ‘நீங்கள் இனி இந்தியாவில் தங்கிச் சேவை புரியப்போகிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்கிறேன். நம் நாட்டுக்கு வழிகாட்டும் விளக்காக நீங்கள் திகழ்வீர்கள் என்று நம்புகிறேன்.’
Add Comment