46. மாயத் திரை
பதற்றமும் நடுக்கமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. பைசாச வாழ்வில் பதற்றம் என்ற ஓர் உணர்ச்சிக்கு இடமே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஏனெனில் எங்கள் உலகத்தில் எதிரிகள் கிடையாது. துரோகிகள் இருக்க முடியாது. யாரும் யாரையும் அழிக்க முயற்சி செய்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கையில் யாரும் இருப்பதில்லை. பசி கிடையாது. உறக்கம் கிடையாது. ஓய்வென்ற ஒன்றில்லை. வாதையுண்டு. ஆனால் அது வாழ்க்கை முறையாகிவிடும்போது பெரிதாகப் பொருட்படுத்தத் தோன்றாது. அனைத்துக்கும் மேலாக வெற்றியோ தோல்வியோ இல்லாத பெருவெளியில் நாங்கள் நீந்திக்கொண்டிருப்போம். யாரும் யாரையும் முந்த முயற்சிகூடச் செய்வதில்லை. எழுபதுக்கும் மேற்பட்ட சம்வத்சரங்கள் அப்படியே வாழ்ந்துவிட்டுச் சட்டென்று பதற்றத்தின் கோரப் பிடியில் சிக்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. நான் சிலவன். கன்னுலா தேவியினால் ஏவப்பட்ட பைசாச ராஜன்.
தேவி எனக்குப் பாதையைச் சுட்டிக் காட்டியிருந்தாள். அவளது சகோதரனைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருந்தாள். அவனுடன் செல்லும் சூத்திர முனியைக் குறித்த தகவல்களையும் சொல்லியிருந்தாள். அவர்களது இலக்கு எனக்குத் தெரியும். செல்லும் திக்கு தெரியும். இவ்வளவு இருந்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என்பது அவமானமாக இருந்தது. தேவியிடம் திரும்பிச் சென்று சொல்வதற்கு ஒற்றை மங்கலச் சொல்கூட இல்லாவிட்டால் நான் எதற்கு இருக்க வேண்டும்?
துரதிருஷ்டம், பைசாச வாழ்வில் தற்கொலை சாத்தியமில்லை. இன்னொரு பைசாசத்தை ஏவிக் கொல்லச் சொல்லவும் வழியில்லை. பைசாசமாக உயிர்த்திருக்கவும் அருகதையற்றுப் போய்க்கொண்டிருக்கிறேனோ என்ற எண்ணமே என் பதற்றத்தின் அடிப்படை. கிராதர்கள், ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் எங்களுக்கு விளங்காமலேயே இருந்த ஒரு பேருண்மை அதுதான். எது எங்களைத் தோல்வியில் தள்ளியது? எது அவர்களைத் தொடர்ந்து வெற்றியின் பாதையில் வழி நடத்திச் செல்கிறது?
Add Comment