47. அஹிபுதன்யன்
நான், கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். அதர்வன் என்னும் பிராமணனைக் கொலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருப்பவன். இது எனக்களிக்கப்பட்ட ஒரு ராஜாங்கப் பணி. சரியாகச் செய்தால், எங்கள் ராஜன் என்னைப் பாராட்டுவான். பரிசிலளித்து கௌரவிப்பான். ஒருவேளை என் முயற்சியில் நான் தோற்க நேர்ந்தால், அதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி விளக்கம் தந்தால் போதுமானது. எனது இந்தப் பணியில் ஒருவேளை நான் உயிர் துறக்கவும் நேரிடலாம். என்றாவது ஒருநாள் அத்தகவல் எங்கள் ராஜனைச் சென்றடையலாம் அல்லது அடையாமலும் போகலாம். நானொருவன் என்ன ஆனேன் என்று அறியும் ஆவலில் உள்ளவர்களே காலம் முடிந்து இறந்து போகலாம். அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை.
ஆனால் அந்த சூத்திர முனியைச் சந்தித்த பிறகு என் சமநிலை ஆட்டங்காணும் அளவுக்கு என்னென்னவோ நடக்கத் தொடங்கிவிட்டது. அதர்வனைக் குறித்து அவன் சொல்கிற தகவல்கள் ஒருபுறம் திகைப்படைய வைக்கின்றன என்றால், எல்லை தாண்டி இந்தப் பக்கம் வரக்கூட இயலாத என் சகோதரி கன்னுலா என்னை அந்த முனியிடம் இருந்து விலகிச் செல்லும்படி ஒரு பட்சியின் மூலம் தகவல் அனுப்பியது எனக்குத் தீரா வியப்பளித்தது. அதுவும் போதாதென்று இப்போது அவள் என்னைப் பிரித்தெடுப்பதற்காகப் பைசாசங்களை ஏவி விட்டிருப்பதாக அந்தச் சூத்திர முனி சொன்னான்.
‘வாழ்வில் ஒரு பைசாசத்தை நேருக்கு நேர் நான் சந்தித்ததேயில்லை. உன் மாயத் திரையைச் சிறிது விலக்கிக்கொள். நான் ஒரே ஒருமுறை அதனை தரிசித்துவிடுகிறேன். பிறகு மீண்டும் மூடிக்கொள்’ என்று சொல்லிப் பார்த்தேன். அவன் என்னை முறைத்தான்.
‘நீ என்னை நம்பவில்லை அல்லவா?’
Add Comment