ஐக்கிய அமீரகத்துக்கு நவம்பர் என்றால் வசந்த காலம். நான்கு , ஐந்து மாதங்கள் தொடரும் குளிர்காலத்தில் விடுமுறைகளும் திருவிழாக்களும் களைக்கட்டும். அதில் மிக முக்கியமானது குளோபல் வில்லேஜ் மேளா.
குளோபல் வில்லேஜ் போகும் பார்வையாளர்களுக்கு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்த பரவசம் கிடைத்துவிடும். ஒரே இடத்தில் நாற்பது நாடுகளின் கலாசாரங்கள், உணவகங்கள், கலை நிகழ்ச்சிகள், கடைகள் இருக்கின்றன. கடந்த அக்டோபர் மாத மத்தியில் இருந்து இருபத்து ஒன்பதாவது குளோபல் வில்லேஜ் மேளா ஆரம்பித்து விட்டது.
1996 ஆம் ஆண்டு தேராவில் இருக்கும் துபாய் கிரீக்கில் ஆரம்பித்தது குளோபல் வில்லேஜ். அப்போது பத்து நாடுகள் மட்டும் பங்கு கொண்டார்கள். தொடர்ந்து அங்கு சிறிய அளவில் நடந்த குளோபல் வில்லேஜ் 2001 ஆம் ஆண்டு ஊது மேத்தா என்னும் இடத்திற்கு மாறியது. அப்போது மக்களின் வருகை லட்சங்களைத் தாண்டி இருந்தது. பங்கு கொள்ளும் நாடுகளும் இருபதாக அதிகரித்திருந்தன
2004 ஆம் ஆண்டு துபாய் பெஸ்டிவல் சிட்டியில், 1,47,000 சதுரடியில் குளோபல் வில்லேஜை அமைத்தார்கள். அந்த வருடம் முப்பத்தொரு லட்சம் மக்கள் வந்து குவிந்தார்கள்.
Add Comment