கடந்த பதினான்காம் தேதி நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கருத்துக் கணிப்பாளர்களும் எதிர்பார்க்காதது நடந்தது. எந்தவொரு அரசியல் விமர்சகர்களும் கனவு கூடக் காணாத ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுபத்தொரு சதவீத வாக்குகளைப் பெற்று மொத்தம் இருநூற்று இருபத்தைந்து ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நூற்று ஐம்பத்தொன்பது ஆசனங்களை அள்ளி இருக்கிறது.
நம்புவதற்குச் சற்றுக் கஷ்டம்தான். இத்தனை பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகும் ஒரு வெடி கொளுத்தப்படவில்லை. ஆரவார ஊர்வலம் இல்லை. ‘வாழ்க’ கோஷங்கள் இல்லை. வாகனங்களின் தொடர் அணிவகுப்புக்கள் இல்லை. மற்றவர்களைப் போல பெரும் இடாம்பீகமாய்க் கொண்டாடி திக்குமுக்காடாமல் ‘வாக்களித்த மக்கள் எம் மீது சுமத்திய பாரிய பொறுப்புக்கு நன்றி, இந்த வெற்றியை நாம் எதிர்பார்க்கவே இல்லை’ என்று படு நேர்மையாய் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஜே.வி.பி இன் தலைமைச் செயலகம். ஆம் , இருபத்திரண்டு தேர்தல் மாவட்டங்களில் இருபத்தியொன்றில் வெற்றி. அதுவும் யாழ்ப்பாணம், வன்னி போன்ற தமிழர்கள் அதிகமாய் வாழும் மாவட்டங்களிலே வெற்றி என்பதை யார்தான் எதிர்பார்த்தார்கள்.
செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாற்பத்து இரண்டு சதவீத வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். அப்போது, ஐம்பத்தெட்டு சதவீத மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சிகளும் எள்ளி நகையாடினர். ஆனால் இதைப் பற்றி அநுர பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. பாராளுமன்றத்தில் அவரையும் சேர்த்து மூன்று பேர்தான் இருந்தார்கள். கெபினட்டை அமைத்தார். பாராளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.
Add Comment