ஆதிகாலத்தில் குழந்தையைப் பெற்றோமா சமைத்தோமா வேலை முடித்துக் களைத்து வந்த கணவனுக்கு பணிவிடை செய்தோமா என்று மட்டும் பெண்கள் இருந்தபோது உலகம் எவ்வளவு அழகாக இருந்தது. ஆனால் காரியதரிசிகளாக நீண்ட நகங்களும் உயர்ந்த காலணிகளும் குட்டைப் பாவாடையுமாக ஆண்கள் மத்தியிலே பெண்கள் பணி புரிய வந்த போது நன்றாகத்தான் இருக்கிறது என்ற போலி மயக்கத்தில் ஆண்கள் விழுந்த போது ஆரம்பமானது சனி.
பெண்களுக்கு இன்னும் கொஞ்சம் திறன்கள் வேண்டும் என அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வந்தது வினை. பெற்ற மகள்கள் பாசப்புன்னகையில் மனத்தை பறிகொடுத்து நாளை இவர்கள் இன்னொருவரின் மனைவியாகப் போகிறவர்கள் என்பதை யோசிக்காமல் பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்ப வந்தது பூகம்பம்! படித்து தெளிந்து முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் கற்றுக்கொண்டார்கள். இன்று இந்தப் பெண்கள் நுழையாத துறைகளே இல்லை. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து கடைசி வரை நாடகமாடிப் பின் விவாகரத்துப் படியேறி இந்தப் பெண்கள் செய்யும் அட்டகாச எடுத்துக்காட்டுகள் ஏராளம்!
மேலாண்மையில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த ஆணும் பெண்ணும் காதலித்து மணம் முடித்தனர். பெண் நன்றாகப் படிக்கக் கூடியவர். திருமணம் ஆனபின் வீட்டை நிர்வகிக்கவும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவும் பெண் பணியை விட்டுவிட, ஆண் கஷ்டப்பட்டு உழைத்து மிகப் பெரிய செல்வந்தனாகிறான். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகவே சொத்து. அவ்வப்போது மனைவி அவனுக்கு அறிவுரை தந்திருக்கிறாள். இரண்டு குழந்தைகளில் ஒருவர் மருத்துவராகவும் மற்றொருவர் வழக்கறிஞராகவும் ஆனபின் தம்பதிகள் பிரிகிறார்கள். கோடிக்கணக்கான சொத்தில் மனைவிக்குப் பாதிக்குப் பாதி கிடைக்கிறது. கணவனின் ஓய்வூதியத்திலும் பாதி. திகைத்துப்போகிறான் கணவன். உழைத்தது அவன். அலுவலக அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகி நாளுக்கொரு ஊராய் அலைந்து திரிந்து திரவியம் தேடியது அவன். ஆனால் வீட்டில் அழகாய் குழந்தைகளுடன் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் சிரித்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனைவிக்குப் பாதிக்குப் பாதியா? இப்படிப் போகும் என்று தெரிந்தால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாமோ?
Add Comment