32. எதிர்மறைக் கேள்விகள்
கடன் வாங்குவது என்பது ஒருவர் ஏற்றுக்கொள்கிற மிகப் பெரிய பொறுப்பு. ஓராண்டுக்குள் முடிந்துவிடுகிற சிறிய கடன்கள்கூடக் கொஞ்சம் பரவாயில்லை. ஐந்து, பத்து, இருபது, ஏன், முப்பது ஆண்டுகளுக்குக்கூட நீளக்கூடிய கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன், தொழிற்கடன் போன்றவற்றைத் தொடங்குமுன் பல முறை யோசிக்கவேண்டும். சரியான நீண்ட காலத் திட்டம் இல்லாமல் அந்தப் புதிர் விளையாட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது.
நம் ஊரில் ஆழம் தெரியாமல் காலை விடாதே என்றும், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றும் இரண்டு பழமொழிகள் உண்டு. இந்த இரண்டு அறிவுரைகளும் கடன் வாங்க விரும்புவோருக்கு மிக நன்றாகப் பயன்படும்.
இங்கு ஆழம் என்பது எத்தனை ஆண்டுகளுக்கு மாதந்தோறும் எவ்வளவு தொகையைச் செலுத்தவேண்டும் என்கிற கணக்கு. அந்த ஆற்றில் இறங்குவதற்குமுன்னால், நம்மிடம் இருக்கிற குதிரை (வேலை அல்லது தொழில்) வலுவானதா, கடன் முடியும்வரை எப்பேர்ப்பட்ட வெள்ளம் பெருகிவந்தாலும் ஆற்றைத் தாண்டிச் செல்ல உதவக்கூடியதா, அல்லது, அது நீர் பட்டதும் கரைந்துவிடக்கூடிய மண் குதிரையா என்பதைப் புரிந்துகொண்டால்தான் இந்த நெடும்பயணத்தில் வெற்றி கிடைக்கும்.
Add Comment