49. மகரம்
நதியின் ஊடாகவே நடந்து, ருத்ர மேருவைக் கடந்து கரையேறியபோது குளிர்க் காய்ச்சல் கண்டது. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல சுய நினைவிழந்து அனத்தத் தொடங்கினேன். அந்த சூத்திர முனி என்னைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடந்தான். பிறகு இறக்கிப் படுக்க வைத்துவிட்டு அருகே அமர்ந்தான்.
‘முனியே, இந்தக் காய்ச்சலை எப்படியாவது சரி செய்துவிடு. முடியாவிட்டால் குளிரை மட்டுமாவது நீக்கிவிடு. என்னால் இரண்டையும் சேர்த்துச் சகிக்க முடியவில்லை’ என்று சொன்னேன்.
‘சிறிது பொறுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு அவன் கண்மூடி யோசித்தான்.
‘அந்த பிராமணனிடம் நீ வைத்தியம் கற்க வழி அமையாது போயிருக்கலாம். எனக்குச் சில எளிய வைத்திய முறைகள் தெரியும். நான் சொல்கிற மூலிகைகளை மட்டும் நீ கொண்டு வர முடியுமானால் போதும்’ என்று சொன்னேன்.
Add Comment