53. ஜீவாத்மா
ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. எல்லாமே வினோதமாக இருந்தது. ஒரு கொலைச் செயலை நிகழ்த்தவிருப்பவனுக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்தபட்சப் பதற்ற உணர்ச்சிகூட எனக்கில்லை. தன்னை அழிப்பதற்காக வந்திருப்பவன் என்று தெரிந்தும் அவன் என்னை ஓர் அதிதியாகவே நடத்தினான். உலகு தோன்றிய நாள்முதல் எங்குமே இப்படியொன்று நடந்திருக்காது என்று தோன்றியது. எங்கள் சம்பாஷணை ஆரம்பமான விதத்தைச் சொன்னால் இது தெளிவாகப் புரியும். அவன் என்னிடம் முதலில் கேட்டது சூத்திர முனியைப் பற்றி. அவன் எப்படி இருக்கிறான்?
‘இதோ பார் ரிஷியே, அவன் நன்றாக இருக்கிறான் என்று நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. உனக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. என் நோக்கம் தெரிந்திருக்கிறது. நான் எப்படி, எங்கிருந்து, யாருடைய உதவியுடன் வந்திருக்கிறேன் என்று தெரிந்திருக்கிறது. நான் வந்தது பற்றிய அச்சமோ பதற்றமோ உனக்கில்லை. இது உன் தெளிந்த மனத்தை எனக்குச் சொல்கிறது. இவ்வளவும் தெரிந்தவன், உன்னை நான் எப்படிக் கொலை செய்ய வேண்டும் என்பதையும் நீயே சொல்லிவிடுவதுதான் சரி. அது என் நேரத்தை மீதமாக்கும்’ என்று சொன்னேன்.
அவன் உடனே பதில் சொல்லவில்லை. இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருக்கிறான் பார்ப்போம் என்று நானும் காத்திருக்கும் தோரணையில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் நெடுநேரம் இமைக்காதிருக்க முடியவில்லை. தவிர, குளிர் என்னைக் கொன்றே போட்டுவிடும்போல இருந்தது. உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவன் அதைக் கவனித்துவிட்டு, ‘இரு’ என்று சொல்லிவிட்டுக் குனிந்து குடிசைக்குள் சென்று ஒரு கம்பலத்தை எடுத்தான். நானும் குடிசைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன். அவன் கையில் இருந்த கம்பலத்தைப் பிடுங்கிப் போர்த்திக்கொண்டு சிறிது ஆசுவாசம் கொண்டேன். அவன் நிற்க முடியாமல் சிரமப்பட்டான். முதுகு வளைத்து நின்றபடியே என்னைப் பார்த்தான்.
Add Comment