உக்ரைன் என்று சொன்னவுடன் தோன்றுவது இரண்டாண்டுகளுக்கும் மேலாக அங்கே நடக்கும் போர். ஆனால் அதற்கு முன்பிருந்தே, உக்ரைனில் பிறந்த ஒரு கணினிப் பொறியாளரின் படைப்பின் மூலமாகத் தான் இன்றைக்கு உலகில் இருக்கும் முந்நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வாழ்வில் வரும் பிறப்பு, இறப்பு, காதல், சண்டை என்று எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொள்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நம் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக ஆகியிருக்கும் வாட்ஸ்-ஆப் செயலி தான் அது. இச்செயலி, எப்படித் தோன்றியது, அது எப்படி வேலைச் செய்கிறது என்கிற தொழில்நுட்பத்தையும் சேர்த்துத் தெரிந்து கொள்வோம்.
அப்போது சோவியத் ஒன்றியத்தில் இருந்த உக்ரைன் நாட்டில் பிறந்தவர் யூதரான யான் கோம் (Jan Koum). நாட்டின் ரகசிய போலீஸ் யூதர்களைக் குறிவைக்க, தனது தாயோடு அகதியாக அமெரிக்காவிற்கு 1992ஆம் ஆண்டு வந்தார். அப்போது அவருக்குப் பதினாறாம் வயது. அமெரிக்கா வந்தவர்கள் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. மொழி தெரியாத ஊர். ஆதரவுக்கு யாருமில்லை. அவரின் தாய், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்ணாக வேலை தேடிக்கொண்டா். கோம் பலசரக்குக் கடையொன்றில் துப்புரவு பணி செய்தார். இவர்களோடு சேர வருகிறேன் என்று சொன்ன கோம்மின் தந்தை அமெரிக்க வர முடியாமல் போய் சில ஆண்டுகளிலேயே இறந்தும் போனார். அடுத்த சில ஆண்டுகளில் தனது ஒரே துணையான தாயாரையும் புற்று நோய்க்குப் பறி கொடுத்தார் கோம்.
இனி வாழ்க்கையே முடிந்தது என்று எண்ணியவருக்கு கை கொடுத்தது பள்ளியில் தானாகவே கற்றிருந்த கணினி வலையமாக்கத்தில் (நெட்வொர்க்கிங்) அவருக்கு இருந்த தேர்ச்சி. அதைக் காட்டி சான் ஒசே மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்குச் சேர்ந்தார். கல்லூரியின் கட்டணத்தைக் கட்ட, அதே கணினித் திறனின் அடிப்படையில் பிரபலக் கணக்காய்வு நிறுவனமான எர்ன்ஸ்ட் & யங்கில் பகுதி நேரப் பணியாளராகச் சேர்ந்தார். இவரை அப்போது பிரபலமாக இருந்த யாகூ தேடுபொறி நிறுவனத்திற்கு அனுப்பினார்கள். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அங்கேயே பணியில் இருந்தார் கோம். பின்னாளில் வாட்ஸ்-ஆப்பை தொடங்கத் தன்னுடன் இணைந்த பிரையன் ஆக்டன்னை (Brian Acton) அவர் சந்தித்தது யாகூவில் தான். யாகூ தடுமாறத் தொடங்க இருவரும் தங்களின் வேலையை விட்டுவிட்டு தென் அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்தார்கள்.
Add Comment