54. தரு
மீண்டும் காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இம்முறை அது பனியினாலோ, குளிரினாலோ உண்டானதல்ல என்று அந்த பிராமணனிடம் சொன்னேன். வாழ்வில் முன்னெப்போதும் கண்டிராத அதிர்ச்சியும் பதற்றமும் என்னை இறுகக் கவ்வியிருந்தன. சுவாசம் சீராக இல்லை. நடுக்கம் உள்ளுறுப்புகள்வரை இருப்பதை உணர முடிந்தது. கண்கள் எரிந்தன. காதுகள் தீச்சட்டியினைப் போலச் சுட்டன. நடுப்பாதங்களில் நரம்புகள் துடித்தன. ஒரு கிராதன், குளிருக்கு அஞ்சி, சுருண்டு விழ என்றென்றும் வாய்ப்பில்லை. அது எப்படிப்பட்டதாயினும் சரி. எத்தனை வீரியம் கொண்டதாயினும் சரி. அவன் ஹிமத்தின் வித்து. ஆனால், காரணம் எதுவானாலும் வந்துவிட்ட காய்ச்சலை இல்லையென்று சொல்ல இயலாது. அதே உடல் நடுக்கம். விரல்கள் விரைத்துக்கொண்டுவிட்டன. ஒன்றன்மீது ஒன்றாக மூன்று கம்பலங்களை அவனது மாணாக்கர்கள் என்மீது போர்த்தினார்கள். அப்போதும் நடுக்கம் குறையவில்லை. தவிட்டை வறுத்து ஒரு துணியில் முடிந்து எடுத்து வந்து என் பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் நெற்றியிலும் வைத்து ஒற்றி எடுத்தார்கள். கசப்பும் காரமும் மிகுந்த கஷாயமொன்றை அவன் எனக்குக் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். கொதிக்கக் கொதிக்க இருந்த அக்கஷாயத்தை ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்.
‘ஒரு நாழிகையில் காய்ச்சல் விட்டுவிடும்’ என்று சொன்னான்.
என்னைச் சிறிது நேரம் உறங்கச் சொல்லிவிட்டு அவர்கள் குடிசையை விட்டு வெளியேறிச் சென்றார்கள்.
நடந்தவற்றை என்னால் அப்போதும் பதற்றமின்றி எண்ணிப் பார்க்க இயலவில்லை. நான் அற்புதங்களைக் கண்டு பிரமித்து நின்றுவிடுகிற மனிதனல்லன். அவை எப்படி நிகழ்த்தப்படுகின்றன என்று என் சகோதரி எனக்குச் சொல்லியிருக்கிறாள். சூத்திர முனியுடன் இருந்த நாள்களில் எனக்காக அவன் எத்தனையோ அற்புதங்களைச் செய்து, தேவைகளைத் தீர்த்து வைத்திருக்கிறான். தெய்வங்கள் அளிக்கும் வரங்களைப் பயன்படுத்தும் விதங்கள் குறித்து நிறைய பேசியிருக்கிறான். ஆனால் அதர்வன், தான் எந்த அற்புதமும் செய்யவில்லை என்று நிச்சயமாகச் சொன்னான்.
‘சாரனே, பதற்றமடையாமல் நான் சொல்வதை எண்ணிப் பார். ஒரு பாறையை உன்னால் இரு கரங்களைக் கொண்டு நொறுக்கிவிட முடியுமா?’
Add Comment