3. இறந்த நேரம் என்ன? (பகுதி – 2)
மூன்று வயதேயான அந்தச் சிறுவன் தொலைந்து பத்து நாள்களாகி விட்டிருந்தன. ஆயினும், போலீசாரின் தேடுதலில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தையின் பெற்றோர் அழுதுதீர்த்தனர். “என் மகனின் விதி அவ்வளவுதான். நீங்கள் என்ன செய்வீர்கள்” பெருந்தன்மையுடன் பேசினார் தந்தை.
தந்தையின் நடத்தையில் ஒரு நாடகத்தனத்தை உணர்ந்தார் ஆய்வாளர். குற்றத்தின் வாடையை உணர்ந்தார். அவ்வாடையை நுகரும் உணர்கொம்புகள் அவருக்குண்டு. இத்தனை வருடக் காவற்பணியில் முளைத்தவை அவை. ஆனால், நீதிமன்றம் உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ பொருட்படுத்துவதில்லை. அதற்குத்தேவை ஆதாரம். அது இல்லையேல், கடவுளிடம் முறையிட்டுவிட்டுக் கடந்துசெல்ல வேண்டியதுதான். ஆய்வாளர் ஆதாரங்களைச் சேர்க்க முற்பட்டார்.
குழந்தையின் அண்டைவீட்டாரின் தகவலொன்று அவரை யோசிக்க வைத்தது. குழந்தை காணாமல்போன நாளன்று அக்குழந்தையின் தந்தை சாக்குமூட்டையொன்றை எங்கோ தூக்கிச்சென்றாராம். நல்லது. இது ஒரு முன்னேற்றம்தான். ஆனால், இது போதாது. மேலும் சிலரை விசாரித்தார் அவர். அந்தக்குழந்தையை முன்பொருநாள் முகத்தில் காயங்களுடன் கண்டதாக ஒருவர் தகவலளித்தார். வேறொருநாளில் கால் உடைந்து காணப்பட்டதாக இன்னொருவர் தெரிவித்தார். அந்தத்தந்தைக்கு மேலும் இரண்டு குழந்தைகள் உண்டு. வயதில் சற்றுப் பெரியவை. அக்குழந்தைகளும் காயமடைவதற்கு விலக்காக இல்லை. தன் குழந்தைகளைத் துன்புறுத்தி மகிழ்பவரோ இவர், எனச் சந்தேகித்தார் ஆய்வாளர். ஆனாலும் என்ன செய்ய? எவ்வளவு முயன்றும் அத்தந்தைக்கு எதிராக வலுவான சாட்சிகளேதும் கிடைக்காமலே போய்விட்டன.
Add Comment